Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Print PDF

மாலை மலர்            04.12.2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

சென்னை, டிச. 4 - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியர்–ஆசிரியைகள் சிக்கியுள்ளனர்.

10–ம் வகுப்பு, பிளஸ்–2 படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிக்காமலேயே, படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த போலி ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் வேலை செய்து பல லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர்.

போலி ஆசிரியர்கள் பட்டியலில் முதல் கட்டமாக 8 பேர் இடம் பெற்றனர். அவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலி ஆசிரியர்களில் 3 பேர் முருகன், ராஜா, குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் மாநகராட்சி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.மேலும் 5 போலி ஆசிரியர்களை போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து போலி ஆசிரியர்கள் சத்தியவாணி, எழில்மாறன், சத்தியவேலு, தினகரன், சுகுமாறன், ஆகியோரை இணை ஆணையர் (கல்வி) சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுவரை மொத்தம் 8 போலி ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் எழில் மாறனும் – சத்தியவாணியும் கணவன்– மனைவி ஆவர்.

போலி சான்றிதழ் கொடுத்து வேலை பார்த்து சம்பளம் பெற்ற இவர்களின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இதுவரை முறைகேடாக பெற்ற சம்பள பணத்தை திரும்ப பெறுவது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

8 போலி ஆசிரியர்களும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளனர். அந்த பணத்தை முறைப்படி திரும்ப பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரி தெரிவித்தார்.