Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

Print PDF

தினமலர்           05.12.2013 

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

இரண்டாவது முழுமை திட்டத்தை (மாஸ்டர் பிளான்) மறு ஆய்வு செய்ய, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஓராண்டு கால அவகாசம் கேட்டு உள்ளது.

சென்னை, பெருநகர் பகுதியில், 2026ம் ஆண்டு வரை, ஏற்படக்கூடிய வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டம், 2008ம் ஆண்டு செப்டம்பர், 2ம் தேதி, நடைமுறைக்கு வந்தது.

பொருளாதாரம், போக்குவரத்து, உறைவிடம், உள்கட்டமைப்பு, திடக் கழிவு மேலாண்மை குறித்த, தற்போதைய நிலை, 2026ம், ஆண்டு வரை ஏற்படக்கூடிய வளர்ச்சி, அதற்கான தேவையான திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் தெரிவிக்கப்பட்டன.

குழுக்கள்

இந்த பரிந்துரைகளை, செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குழு, நில பயன்பாடு மற்றும் சுற்றுச் சூழல் குழு, போக்குவரத்துக் குழு, உறைவிடம் மற்றும் உள் கட்டமைப்பு குழு, திட்ட முதலீடு மற்றும் ஆளுமை குழு ஆகிய ஐந்து குழுக்கள், அமைக்கப்பட்டு உள்ளன.

நகரமைப்பு சட்டப்படி, முழுமை திட்ட விதிமுறைகளின்படி, இந்த குழுக்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, புதிய திட்டங்களுக்கான, பரிந்துரைகளை வழங்க வேண்டும். இந்த பரிந்துரைகளின் செயலாக்கம், முழுமை திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, முடிவுகள் எடுக்க முழுமை திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு, ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மறு ஆய்வு


சி.எம்.டி.ஏ.,வின், இரண்டாவது முழுமைத்திட்டம் அமலாகி ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், அதை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகள், வழங்குவதற்கான குழுக்கள் முறையாக செயல்படாததால், முழுமை திட்டத்தை இப்போதைக்கு மறு ஆய்வு செய்ய வேண்டாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இத்தகைய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தன்னிச்சையாக எடுக்க முடியாது. இதனால், இதற்கு, அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

கால அவகாசம்

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர், கூறியதாவது:

இரண்டாவது, முழுமை திட்டத்தை மறு ஆய்வு செய்வதை, ஓராண்டு ஒத்தி வைக்க, அரசின் அனுமதி கேட்டு, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. ஆனால், ஓராண்டு வரை, இந்த பணிகளை ஒத்தி வைக்காமல், இப்போதே, அதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ.,வுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.

நிர்வாக ரீதியாக, இதுகுறித்த விவரங்கள் சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.