Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன்           12.12.2013

ரூ1.50 கோடி மதிப்பில் ஆனந்தா பாலத்தில் இணைப்பு சாலை மேயர், ஆணையாளர் நேரில் ஆய்வு

சேலம், : சேலம் மாநகராட்சி ஆனந்தா மேம்பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மேயர், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியான ஆனந்தா மேம்பாலத்தை அகலப்படுத்தி, இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான திட்டப்பணிகள் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. இதற்காக தனியாரிடமிருந்து ரூ2.90 கோடி மதிப்பிலான 10ஆயிரத்து 364 சதுரடி நிலத்தை மாநகராட்சி கிரயம் செய்தது. இதையடுத்து தற்போது பணிகள் நிறைவு பெற்று தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணைமேயர் நடேசன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், சித்ரா, செயற்பொறியாளர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆனந்தா பாலத்தில் ரூ1.50 கோடியில் இணைப்பு சாலை அமைத்து தார்போட்டு, தெருவிளக்குகள் அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலை அர்ப்பணிக்கப்படும். நெரிசலை கருத்தில் கொண்டு இதனை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தலாமா? என்பது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.