Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்             16.12.2013

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

பொள்ளாச்சி:ஊராட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.156 லட்சம் குடிநீர் கட்டண தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ளன. இத்தொகையை செலுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில், கோட்டூர் -வேட்டைக்காரன்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மூன்று குடிநீர் திட்டங்கள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் மூலம், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, வேட்டைக்காரன் புதூர், ஆனைமலை, ஒடையகுளம், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும்; கிணத்துக் கடவு தாலுகாவில் உள்ள ஒன்றியம், பேரூராட்சி, பெரிய நெகமம் பேரூராட்சி, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

புதூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 250 லட்சம் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடிநீர் திட்டத்திலும், குறிப்பிட்ட பகுதிகளில்,"நீரேற்று நிலையம்' அமைக்கப்பட்டு, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை கிராமங்களில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு, ஊராட்சி நிர்வாகம், கிராம மக்களுக்கு வினியோகிக்கிறது.

தினசரி 23 மணிநேரம் செயல்படும் வகையில் இத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு, மூன்று ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

ஆண்டிற்கு ஆறு கோடி

குடிநீர் வடிகால் வாரியத்தில், கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு மின்சார தேவை அவசியமானதாக உள்ளது. இதற்காக, மாதத்திற்கு ரூ.50 லட்சம் வீதம் ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

கூடுதல் செலவு

தற்போது மின்தடை ஏற்படுவதால், குடிநீர் முறையாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, நீரேற்று நிலையங்களில்,"ஜெனரேட்டர்' உதவியுடன், மோட்டார்கள் இயக்கப்பட்டு, குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது.

இதற்காக கடந்த ஒரு ஆண்டு மட்டும், ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மின்தேவைக்காக மட்டும் ஆண்டிற்கு, 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

நிலுவைத்தொகை


குடிநீர் திட்டங்கள் முறையாக குடிநீர் வினியோகிக்க, மின்சாரத்திற்கு மட்டும் 7.50 கோடி ரூபாய் செலவாகிறது.

இவ்வாறு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு முறையாக உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசு அலுவலகங்களும் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால், நிலுவையில், பல லட்சம் ரூபாய் கட்டணம் உள்ளது.

மூன்று கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 130 கிராமங்கள், 8 பேரூராட்சிகள், 11 தனியார் இணைப்புகள் (பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவை) என மொத்தம் 149 பயனாளிகள், 41லட்சமும்; ஆச்சிப்பட்டி, ராசி செட்டிபாளையம் இரண்டு ஊராட்சிகளும், மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதிக்கு வழங்கப்படும் குடிநீருக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய 115 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. மொத்தம் 156 லட்சம் ரூபாய் உள்ளாட்சி நிர்வாகங்கள் செலுத்த வேண்டும்.

குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றால், உள்ளாட்சி நிர்வாகங்கள் முறையாக குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு கோட்டம் உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்,"குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தாததால், 156 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. இதனை முறையாக செலுத்தினால், குடிநீர் திட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனே செலுத்த முன்வரவேண்டும்,'' என்றார்.