Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்கவேண்டும்: ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி              18.12.2013

மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்கவேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை வரும் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்து சாலைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் உத்தரவிட்டார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ரூ.40.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆட்சியர் இரா.நந்தகோபால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். காட்பாடி சாலையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்ட அவர், "தோட்டப்பாளையம் நேஷனல் திரையரங்கு அருகே நடைபெறும் பணிகளை ஜனவரி 2014 இறுதி வாரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். மாநகராட்சியில் தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதப் பணிகளை மார்ச் இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளை, குறிப்பாக முக்கிய சாலைகளில் உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்' என்று அவர் ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டுக் கொண்டார்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்கு சாலை அமைக்கும் பணிக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார். பழைய புறவழிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் கேட்டுக் கொண்ட ஆட்சியர், புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டார். பஸ் நிலைய வாயில்களில் பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தினுள் செல்ல வேண்டும். பஸ்கள் நிறுத்துமிடங்களில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.

பஸ்களை அதற்கான இடங்களில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஆட்டோக்கள் அனைத்தையும் ஒரேஇடத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

பஸ்கள் வந்து செல்லும் நேரங்கள், அவை செல்லும் வழி உள்ளிட்ட விவரப் பலகையை கட்டாயம் வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.