Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

Print PDF

தினகரன்             26.12.2013 

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

பவானி: பவானி நகரப் பகுதியில் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்துவிதமான நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பவானியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சிரமம் கொடுத்த கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டன. நகர வீதிகளில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. அப்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்த நகராட்சி நிர்வாகம் வரும் 31ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘பவானி நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் உள்ள சாக்கடை மேல் கட்டியுள்ள படிக்கட்டுகள், குளியல் அறைகள் மற்றும் இதர கட்டுமானங்களை தாங்களாகவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றி அதற்கான செலவுத் தொகை முழுவதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்‘ என்றார்.