Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

Print PDF

தினமலர்            27.12.2013 

கோவையில் 4 மாடி கட்டடம் இடிப்பு

கோவை:கோவையில், நான்கு பெண்களை பலிவாங்கிய, நான்கு மாடி வணிக வளாகத்தில், இரு தளங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

கோவை அவிநாசி ரோடு, லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில், "விக்னேஷ்வரா கிரிஸ்டா' என்ற வணிக கட்டடத்தில், கடந்த ஏப்.,25ல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நான்கு பெண்கள், உடல்கருகி உயிரிழந்தனர். இந்த வணிக வளாகம் கோவை, ரெட்பீல்ட்ஸ், நாராயணசாமி வீதியை சேர்ந்த, ஜெயலட்சுமி, அவரது மகன் ரமேஷ் ஆதித்யா ஆகியோருக்கு சொந்தமானது. விபத்துக்குப்பின் இந்த வணிக வளாகம், அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டு, "சீல்' வைக்கப்பட்டது. விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கடந்த 1999, டிச., 22ல், பேஸ்மென்ட் 420.24 ச.மீட்டர், தரை தளம் 423.8 ச.மீட்டர், முதல்தளம் 468.3 ச.மீட்டர், மேல்தளத்தில் 47 ச.மீட்டரில் ஒரு அறை கட்ட உள்ளூர் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் தளம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அனுமதியின்றி கூடுதல் பரப்பில் கட்டடம் கட்டியதற்காக, உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கட்டடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது.

இதற்கிடையே, அனுமதியற்ற கட்டுமானத்தை இடிக்க, உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய 30 நாள் அவகாசம் நிறைவடைந்ததால், இரண்டாம், மூன்றாம் தளத்தை இடிக்க, கடந்த மே 31ல், அப்போதைய கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இதற்கான பணிகளும் துவங்கின. எனினும், கட்டட உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்; இடிக்கும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்கக்கூடாது என, முன்பு பிறப்பித்த தடை உத்தரவை, சென்னை ஐகோர்ட் விலக்கிக்கொண்டது.

மேலும், "அனுமதியற்ற கட்டட விவகாரத்தில் தலையிட முடியாது. விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கலாம் என, ஐகோர்ட் கடந்த நவ., 19ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், அனுமதியற்ற கட்டட பரப்பை இடிக்க, கடந்த, 24ம் தேதி உத்தரவிட்டார் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு) சந்திரசேகரன், உதவி இயக்குனர் யோகராஜ், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் விமலா தலைமையில், வணிக வளாக கட்டடத்தில், இரண்டு தளங்களை இடிக்கும் பணி, நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கியது.

உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் சந்திரசேகரன் கூறுகையில், ""அனுமதியற்ற இரண்டு தளங்கள் முழுமையாக இடிக்கப்படும். கான்கிரீட் பில்லர்களை இடிக்க, பவர் கட்டிங் மெஷின் வேண்டும். கோவையில், நவீன இயந்திரங்கள் இல்லாததால், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் பேசியுள்ளோம்.

பவர் கட்டிங் மிஷின் வருவதற்குள், தளங்கள் இடிக்கும் பணி நிறைவு பெறும். அதன்பின், கான்கிரீட் பில்லர்கள் வெட்டி அகற்றப்படும். உள்ளூர் திட்டக்குழும கட்டட அனுமதியின்படி, மற்ற தளங்கள், சுற்றுப்புற திறவிடங்கள் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.