Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரப்பகுதியில் பாலித்தீன் பயன்படுத்தினால் அபராதம்! சுற்றுச்சூழலை காக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

Print PDF

தினமலர்            27.12.2013 

நகரப்பகுதியில் பாலித்தீன் பயன்படுத்தினால் அபராதம்! சுற்றுச்சூழலை காக்க அதிகாரிகள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:"பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும்,' என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், அவற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர்.

ஆனால், பாலித்தீன் பொருட்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை. கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தி வருவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார அதிகாரிகள் நேரடியாக உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு சென்று, 40 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், கடைகளுக்கு முன், நகராட்சி மூலம் வழங்கப்பட்ட அறிவிப்பு நோட்டீசும் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண் வளத்தை பாதிக்கும் பாலித்தீனை தடையை மீறி பயன்படுத்தினால், அபராதம் வதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நகராட்சி பகுதியில், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பொருட்கள் மற்றும் தட்டுகள், டம்ளர்கள், மேஜை விரிப்புகள் ஆகியவை பயன்படுத்துதல் கூடாது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் விதிகளின் படி, தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் பொருட்களால், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், நிலத்தடி நீர் மற்றும் மண்வளம் பாதிப்படைகிறது. பாலித்தீன் கேரி பேக்குகளில், குப்பைகளை போட்டு கழிவுநீர் கால்வாயில் போடுவதால், கழிவு நீர் தேக்கமடைந்து கொசு புழு உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு, யானைக்கால் போன்ற கொடிநோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

பாலித்தீன் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை ஆடு, மாடு போன்ற விலங்குகள் உண்பதால், ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு, விலங்குகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாலித்தீன் பொருட்களை எரிப்பதால், ஏற்படும் புகையினை பொதுமக்கள் சுவாசிப்பதால், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலித்தீன் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதி 2011ன் விதி 5(சி) ன் அடிப்படையில், கொண்டு வரப்பட்ட உப விதிகளின் படி, பாலித்தீன் பயன்பாட்டிற்கு அபராதத்தொகை வசூலிக்கப்படும். பொதுமக்களுக்கு ஒரு பயன்பாட்டிற்கு -ரூ100ம், சிறுவண்டி வியாபாரிகள், சிறுவியாபாரிகளுக்கு ஒரு பயன்பாட்டிற்கு 100 ரூபாயும்; பெரிய வணிக வியாபாரிகள் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். சில்லரை வியாபாரிகள் ஆய்வின் போது, முதல் முறை பயன்பாடு என்றால், ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பயன்பாட்டிற்கு ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

மொத்த வியாபாரிகள் முதல்முறை பிடித்தால், 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். பாலித்தீன் கழிவுகளை எரித்தால், 1000 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே, பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.