Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Print PDF

தினமலர்              02.01.2014

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

கட்டட அனுமதி பணிகளை, விரைவுபடுத்தும் நோக்கில், மூத்த மற்றும் துணை திட்ட அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில், மாநகராட்சிக்கு அனுப்ப, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஒப்புதல் அளித்துள்ளது.

தனி துறை

நகரமைப்பு சட்டப்படி, மூன்று மாடிகள் வரையிலான, ஆறு வீடுகள் கொண்ட சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், நகரமைப்புத்துறை ஒன்று தனியாக இருந்தாலும், திட்ட அனுமதி வழங்கும் நடவடிக்கைகள், மண்டல அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்
படுகின்றன.

மாற்றம்


இந்த அலுவலகங்களில், நகரமைப்பு வல்லுநர்கள் இல்லாததால், கட்டட அனுமதி தொடர்பான பணிகள், தாமதம் ஆவதாக புகார் கூறப்படுகிறது.

எனவே, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போன்று, மாநகராட்சியிலும் நகரமைப்பு வல்லுநர்களை, திட்ட அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் நடந்த சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், இது குறித்து வலியுறுத்தினார்.

ஆனால், ஆரம்ப நிலையில், அதற்கு சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்த தீர்மானம், சில திருத்தங்களுடன் அந்த கூட்டத்தில் நிறைவேறியது. இந்த விஷயத்தில், சில முக்கிய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஒப்புதல்

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி ஆணையர் கோரியபடி, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில் மாநகராட்சிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி திட்ட அதிகாரிகள், திட்ட உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அவர்களை அனுப்ப இயலாது.

ஒப்புதல்

மூத்த திட்ட அதிகாரிகள் (சீனியர் பிளானர்), துணை திட்ட அதிகாரிகள் (டெபுடி பிளானர்) நிலையில் உள்ளவர்களை மட்டுமே, அயல்பணி அடிப்படையில் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு அயல்பணி என்ற அடிப்படையில், அனுப்பப் படும் அவர்களுக்கான ஊதிய விகிதங்களை, தங்களால் சமாளிக்க முடியுமா என்பது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் காலி இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய நிலவரம்

சி.எம்.டி.ஏ.,வில் தற்போதைய நிலவரப்படி, ஐந்து மூத்த திட்ட அதிகாரிகள், 23 துணை திட்ட அதிகாரிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர், தலைமை திட்ட அதிகாரிகளின் உதவியாளர்களாகவே உள்ளனர். திட்ட அனுமதியில், திட்ட அதிகாரிகள் அனுப்பும் கோப்பு களை, தலைமை திட்ட அதிகாரிக்கு, பரிந்துரைப்பதை தவிர, வேறு பணி இல்லாத சூழல் நிலவுகிறது.