Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன்                03.01.2014

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

தேனி, : தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை ஏலம் எடுத்தவர்கள், அவற்றை திறக்காமல் உள்ளனர். இதனால் பயணிகள் சிரமப்படுவதால், ஏலதாரர்கள் கடைகளுக்கான வாடகை முன்பணத்தை உடனடியாக செலுத்தி கடைகளை திறக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனியில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான பை-பாஸ் சாலையில் 7.35 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டுள்ளது.

 இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 உணவகங்கள், 6 நவீன கட்டணக் கழிப்பறைகள், 2 இலவச கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறைகள், 3 வாகனங்கள் நிறுத்தும் இடம், புறக்காவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,  பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. பஸ் ஸ்டாண்ட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் பெயர் சூட்டப்பட்டது.

 கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இந்த பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.
தேனி நகரில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த பஸ் ஸ்டாண்ட் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள் இருந்த போதிலும், இதுவரை ஒரு கடையும் திறக்கப்படவில்லை.

கட்டண கழிப்பறைகளும், டூவீலர் ஸ்டாண்டுகளும் திறக்கப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் புகார் செய்து வருகின்றனர். இதையடுத்து தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில், ‘கடை உள்ளிட்ட பிற இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், நோட்டீஸ் பெற்ற 15 நாட்களில் ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.

ரூ.20 பத்திரத்தில் உறுதிமொழி ஒப்பந்தம் எழுதி அதனையும் இணைத்து நகராட்சியில் ஒப்படைத்து, கடைகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடியாக கடைகளை திறக்க வேண்டும்‘ என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜாராம் கூறுகையில், “புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்துக் கடைகளும் கடந்த ஆண்டே ஏலம் விடப்பட்டன.

 ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் ஒரு ஆண்டிற்கான வாடகையை டெபாசிட்டாக செலுத்தி, பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து விட்டு, கடையை உடனடியாக திறக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது“ என்றார்.