Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா தலைமையில் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

வைகுண்ட ஏகாதசி

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 31-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது, முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4-45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் லதா, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ரெங்கராஜ், உதவி நிர்வாக என்ஜினீயர் அமுதவல்லி, உதவி என்ஜினீயர்கள் லோகநாதன், வேல்முருகன், கவுன்சிலர்கள் முத்துலட்சுமி(3-வது வார்டு),பச்சையம்மாள்(5-வது வார்டு) மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

சாலை விரிவாக்கப்பணிகள்


ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் சாலையை விரிவாக்கம் செய்ய நடைபெற்று வரும் பேவர் பிளாக் போடும் பணி, சாலை ரோட்டில் தற்காலிக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வரும் பணி, 56 சீட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வரும் பணி, குடிநீர் வசதிக்காக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அம்மா மண்டபம் ரோட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வரும் பணி, வடக்கு தேவி தெருவில் பள்ளிக்கூட கட்டிடப்பணி, அடைய வளஞ்சான் பகுதியில் பிரசன்னா பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணி ஆகிய பணிகளை மேயர் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் செய்து முடிக்குமாறு உத்தரவிட்டனர்.