Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி



திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் வரி பாக்கி வைத்தவரின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக துண் டித்தனர்.

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி

திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை சுமார் 60 சதவீத வரித்தொகைகள் மட்டுமே வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட தொகைகளை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள பாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் வரி செலுத்தாமல் நீண்ட நாட்களாக காலம் கடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி வரிவசூல் அதிகாரி சரவணன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் பாலகிருஷ்ணனின் வர்த்தக நிறுவனத்தில் இருந்த குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறியதாவது:-

மாநகராட்சி முழுவதும் நீண்ட நாட்களாக வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. 2-வது மண்டல பகுதியில் இதுவரை மாநகராட்சிக்கு நீண்டகாலம் வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ள 30 பேரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வரித்தொகைகளை செலுத்தாத பட்சத்தில் எவ்வித தயவுமின்றி அவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் குடிநீர் இணைப்பு பெற ரூ.30 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் மக்கள் உடனடியாக வரிபாக்கிகளை செலுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.