Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014   

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் திருமண மண்டபம் மற்றும் மாட்டுத்தாவணி அருகிலுள்ள தயா வலைத்தள பூங்காவுக்கு முறையான வரிவிதிப்பு செய்ய மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்தினருக்குச் சொந்தமான திருமண மண்டபம் மதுரை டிவிஎஸ் நகர் பகுதியிலும், தயா வலைத்தள பூங்கா மாட்டுத்தாவணி பகுதியிலும் அமைந்துள்ளன.

 இந்த இரண்டுக்கும் மிகக்குறைவான வரிவிதிப்பு செய்திருப்பதுடன், இதற்காக அந்தப்பகுதி முழுவதுமே வரி குறைப்பு செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து, சமீபத்தில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நியாயமான வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுக் கூட்டம் தலைவர் எஸ்டி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர்(கணக்கு) ஜோசப், மண்டல நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜன், பழனிவேல், உதவி வருவாய் ஆய்வாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர், பாலமுருகன், காமராஜ், சேகர், நிதி ஆலோசகர் ஜெயபால், மாமன்ற உறுப்பினர்கள் ராஜா சீனிவாசன், திரவியம், குமார், இந்திராணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வார்டு 92 சத்தியசாய் நகர் பகுதியில் (தயா திருமண மண்டபம் உள்ளிட்ட) வரிவிதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறையாக ஏ பிரிவு வரிவிதித்து மாநகராட்சிக்கான வருவாயை மீட்க தீர்மானிக்கப்பட்டது.

 மாட்டுத்தாவணி-புதூர் 100 அடி சாலைப்பகுதி (தயா பார்க் உள்ளிட்ட) வணிகக் கட்டடங்களுக்கு மிகக்குறைவான டி பிரிவில் சேர்த்து வரிவிதிப்பு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப்பகுதியை ஏ பிரிவு வரிவிதிப்பு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்தத் தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் மேற்கண்ட பகுதிகளில் முறையான வரிவிதிப்புக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.