Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

Print PDF

தினமணி          27.01.2014 

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

வாக்காளர் அடையாள அட்டையை வீடு வீடாக வழங்கி, வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் கையொப்பம் வாங்க சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தேசிய வாக்காளர் தினமான சனிக்கிழமை வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திருத்தம் மேற்கொண்டவர்களும் வாக்குச் சாவடிகளில் அட்டைகளை பெற்றனர்.

சென்னை முழுவதும் மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் வீடுவீடாக சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவர். அவ்வாறு அட்டைகளை வழங்கும்போது, வாக்காளர்களிடம் அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடு வீடாக அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இந்த பணியை மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் மேற்கொள்வார்கள். அடையாள அட்டைகள் தவறாமல் வாக்காளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடையாள அட்டைகளை வழங்கும் போது அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் பெற பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் அனைவருக்கும் அட்டைகள் முழுமையாக விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.

அட்டைகள் அவசரமாக தேவைப்பட்டால், மாநகராட்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

அதேவேளையில், கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தவறியவர்கள், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றனர்.

விழிப்புணர்வு மாரத்தான்: தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான், சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விக்ரம் கபூர் வெண் புறாவை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.