Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்                30.01.2014

திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து நகராட்சி எச்சரிக்கை

திண்டுக்கல், : திண்டுக்கல் குமரன் பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்கு சொந்தமான குமரன் பூங்கா கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. பல வண்ண பூச்செடிகள், அழகிய சிமென்ட் சிற்பங்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி இருந்தது. பொதுமக்களின் வருகையும் குறைந்தது.

இதையடுத்து நகராட்சி சார்பில் பல லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இரண்டு வாரத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூங்கா பராமரிக்கும் பொறுப்பை மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ஒப்படைக்க கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதன்முதலாக பூங்கா ஒப்பந்த அடிப்படையில் மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்படி சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் எடுக்கும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சீருடை அணிந்து பகுதிநேரம் பிரித்து பூங்காவை பராமரிக்க வேண்டும். இரவு மற்றும் பகல் காவலர்கள் நியமிக்க வேண்டும். பூங்காவிற்கு தண்ணீர் விட இரண்டு நபர்கள் நியமிக்க வேண்டும்.

உணவு மற்றும் டீ, காபி, குளிர்பானங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். வேறு ஏதும் கடைகள் வைக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட், பான்மசால், குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்யக்கூடாது.

விளையாட்டு உபகரணங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனே பழுது நீக்கி தர வேண்டும். ஒரு நபருக்கு நுழைவுக்கட்டணம் ரூ.5 மட்டும் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வசூல் செய்யப்படும் தொகையிலேயே ஊதியம், பூங்கா பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் செலவினம் ஏற்பட்டால் நகராட்சி இழப்பீடு தர இயலாது. சிலை, சுற்றுச்சுவர் உட்பட அனைத்து பகுதிகளையும் 6 மாதத்திற்கு ஒருமுறை வர்ணம் பூச வேண்டும். பூங்காவில் உள்ள மரங்கள், செடிகளை முன் அனுமதியின்றி வெட்டக்கூடாது. நகராட்சியில் இருந்து பெறப்பட்ட அதே நிலையிலேயே நகராட்சி வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.