Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒட்டன்சத்திரத்தில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு

Print PDF

தினமணி 07.11.2009

ஒட்டன்சத்திரத்தில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு

ஒட்டன்சத்திரம், நவ. 6: ஒட்டன்சத்திரம் காந்தி நகர் செல்ல தரைப்பாலம் அமைக்க தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால், அரசுத் தலைமை கொறடா அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல்-பழனி செல்லும் ரயில்வே பாதையைக் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந் நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர. சக்கரபாணியிடம், தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மதுரை தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. ஆகியோர் எடுத்துக் கூறினர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால், மதுரை கட்டுமான துணைப் பொறியாளர் தினேஷ்குமார்சிங், அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி., திண்டுக்கல் சரக கட்டுமான செயற்பொறியாளர் பூபதி, கோட்டப் பொறியாளர் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து மதுரை மண்டல மேலாளர் அசோக் சிங்கால் கூறியதாவது:

திண்டுக்கல்-போத்தனூர் வரை அகலப்பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது. ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பொதுமக்களின் கோரிக்கையின்படி 33-வது ரயில்வே கேட் பாதையை நிரந்தரமாக மூடிவிட்டு, அதற்கு மாற்றாக காந்தி நகர் குடியிருப்பு மக்களுக்காக ரயில்வே பாதையின் 32-வது கிலோ மீட்டரில் தரைப்பாலம் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது.

இது முடிந்த பின்னர் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

ஆய்வின்போது ஒட்டன்சத்திரம் பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்கொடி, பேரூராட்சிக் கவுன்சிலர்கள் பி.கே. முருகேசன், பழனியம்மாள் ராசியப்பன், சின்னம்மாள் கோபால், ஆனந்தன், திருமலைசாமி, பேரூர் திமுக செயலாளர் கதிர்வேல்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.