Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு: 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

Print PDF

தினமணி 10.11.2009

மழைநீர் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு: 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

கோவை, நவ. 9: மழை நீரால் சாக்கடை அடைப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் போன்ற தொந்தரவுகள் இருந்தால் 24 மணி நேரமும் உதவி பெறலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

மாநகராட்சியின் பல பகுதிகளில் சாக்கடை நீர் அடைப்புகளை சரிசெய்ய ரூ.2 கோடியில் ஏற்கெனவே பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை நீரால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தயார் நிலையில் அலுவலர்கள் பணியில் உள்ளனர். எனவே, 0422-3234071, 3234072 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.

மழைநீர் வடிகால் வசதி இன்றி நீர் தேங்கும் இடங்களில் மழைநீர்த் தொட்டி அமைத்து நிலத்தடி நீரை சேமிக்கலாம்.

தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஒவ்வொரு மண்டலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குளத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் 21 முதல் 25 வார்டுகள், 12 மற்றும் 13-வது வார்டுகள் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதை சரிசெய்யும் வகையில் தண்ணீர் வரும் பகுதியை பொதுப்பணித்துறை மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்ச்சல் மாத்திரை தர ஏற்பாடு: சிக்குன் குன்யா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலைகளை குணப்படுத்தும் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளன.

துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி, வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி, சி.பத்மநாபன், எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், ஆளும்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:29