Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 25.11.2009

திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் திடீர் ஆய்வு

திண்டுக்கல், நவ. 24: திண்டுக்கல் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

திண்டுக்கல் நகராட்சி பகுதி 2 திட்டத்தின் கீழ் ஒத்தகண் பாலம் சாண எரிவாயு தகன மேடை பணி முடிவடைவது எப்போது என்ற கட்டுரையையும், போதிய நிதி இருந்தும் நகராட்சி வளர்ச்சிப் பணிகள் தாமதமாக நடந்து வருவதையும் சுட்டிக் காட்டி மூன்று தினங்களுக்கு முன் தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை அடுத்து திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் இடிந்துள்ள சுற்றுச் சுவரை பார்வையிட்ட ஆட்சியர், அதனை பொது நிதியிலிருந்து உடனே கட்டுவதற்கும், பஸ் நிலையத்திற்குள் உள்ளே பாழடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்கவும், பஸ் நிலையத்திற்கு உள்ளே ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

ஒத்தகண் பாலம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையைப் பார்வையிட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் பணியை முடித்திடவும், அவ்வளாகத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பாலத்தின் கீழ் நடைபெற்று வரும் ஓடை கட்டும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாகல் நகரில் உள்ள சந்தையைப் பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் காந்தி மார்க்கெட்டைப் பார்வையிட்ட ஆட்சியர், அதனை சீரமைக்க அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மார்க்கெட்டில் வியாபாரிகள் வைத்துள்ள வாடகை பாக்கிகளை நகராட்சி வசூலிக்க கேட்டுக் கொண்டார்.

குமரன் பூங்காவைப் பார்வையிட்ட ஆட்சியர், பூங்காவை மேம்படுத்த, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சுற்றுலாத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகராட்சிப் பகுதிகளில் கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து தர முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சிப் பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர்கள் வெற்றிச்செல்வி, அன்னலட்சுமி, நகர்நல அலுவலர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்ட தினமணி, உடனடியாக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மா.வளளலார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:32