Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிங் ரோடு டோல் கேட்: மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

Print PDF

தினமலர் 29.12.2009

ரிங் ரோடு டோல் கேட்: மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

மதுரை: மதுரை ரிங் ரோடு டோல் கேட்டுகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரிங் ரோட்டில் உள்ள டோல் கேட்டுகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. முன்னாள் ராணுவ நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள், இங்கு வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டோல் கேட்டுகளில் சில வாகனங்களிடம் குறைவான பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தராமல் வாகனங்களை அனுமதித்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் மாநகராட்சிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடும் மாநகராட்சிக்கு, இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்களை அடுத்து சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்து, டோல் கேட்டுகளில் பணிபுரிந்தோரிடம் இருந்து கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், டோல் கேட்டுகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். துணை கமிஷனர் சிவராசு, உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், டோல்கேட்டுகளில் திடீர் சோதனையில் ஈடுபடுகின்றன. நேற்று முன் தினம் இக்குழுவினர் சோதனை நடத்தியபோது, ரிங் ரோடு வழியாக வந்த லாரிகளை நிறுத்தி, கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

அதற்கு லாரி டிரைவர்கள், "நாங்கள் எப்போதும் 10 ரூபாய் தானே கொடுப்போம். இப்போது மட்டும் அதிகமாக கேட்கிறீர்களே...' என தகராறு செய்துள்ளனர். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு லாரி டிரைவர்களுக்கு உண்மை நிலையை அறிவுறுத்தி, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோசடி நடக்காமல் இருக்க, அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை செய்கின்றனர்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:34