Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி திட்ட பணிகள் மேயர், கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர் 02.02.2010

மாநகராட்சி திட்ட பணிகள் மேயர், கமிஷனர் ஆய்வு

திருச்சி: திருச்சி மாகநராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும், குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும், மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நாட்டு நிதியுதவி, மாநில அரசின் மானியத் தொகை மற்றும் மாநகராட்சி பங்களிப்பு ஆகியவை சேர்த்து, 169 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தொகுப்புகளாக பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மேலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில், மூன்று இடங்களில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறு மற்றும் பிரதான குடிநீர் உந்து குழாயினை தாங்கும் பாலத்திற்கான கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது தொகுப்பில், பாரதிநகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், சிவா நகர், உறையூர், பாத்திமா நகர், மங்களம் நகர் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

சிவா நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினர். ராமலிங்க நகர் முதல் மெயின்ரோடு பகுதியில் குடிநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். ராமலிங்க நகர் மூன்றாவது குறுக்குத்தெரு, எழில்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, சாலை செப்பனிடும் பணி, ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில், போக்குவரத்து துறை அமைச்சர் நேருவின், திருச்சி-2வது சட்டசபைத் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு பெற்று, மூன்று லட்ச ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:33