Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'நடைபாதை கடை பிரச்னைக்கு தீர்வு'

Print PDF

தினமலர் 10.02.2010

'நடைபாதை கடை பிரச்னைக்கு தீர்வு'

கோவை : ""கோவை நகரில் நடைபாதை கடைகள் முறைப்படுத்தப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசினார். கோவை நகரில் நடைபாதை கடைகளை ஒழுங்குபடுத்த, தன்னார்வ அமைப்பினரை கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அடுத்ததாக, நடைபாதை வியாபாரிகளின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், வியாபாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பின் தொண்டர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பெண்கள் நடைபாதை வியாபாரிகள் சங்க அமைப்பின் செயலாளர் விஜயா பேசுகையில், ""எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. முப்பது ஆண்டுகளாக நடைபாதையில் கடை வைத்து வியாபாரம் செய்கிறோம். நாங்கள் கடை நடத்தும் இடத்தை மாற்ற வேண்டாம். போலீசார் கெடுபிடி செய்ய வேண்டாம். வாகன நெரிசலுக்கு நாங்கள் மட்டும் காரணமல்ல,'' என்றார். காந்திபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் பேசுகையில், ""எங்களுக்கு மாநகராட்சி தனி இடம் ஒதுக்க வேண்டாம். இதனால், பிரச்னைகள் ஏற்படும். கடை ஒதுக்கினால், அதை வாடகைக்கு கொடுத்து விட்டு மீண்டும் நடைபாதையில் வியாபாரம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். ""தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே மாநகராட்சி விதிமுறைப்படி அனுமதியளித்தால் போதும்,'' என்றார்.

இவர்களின் கருத்துகளுக்கு பின், மாநகர தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி தலைவர் பாலசுந்தரம் பேசுகையில், "" வர்த்தகர்கள் மாநகராட்சிக்கு சொத்துவரி, வர்த்தக வரி, வருமான வரி, வணிகவரி, மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதற்காக பல லட்சம் ரூபாயை முதலீடு செய்து தொழில் செய்கின்றனர். எனவே, அவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு நேராதவாறு, நடைபாதை வியாபாரிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கலாம்,'' என்றார். "விருக்ஷா' அமைப்பு செயலாளர் சித்ரகலா பேசுகையில், "" நகரை தூய்மையாக வைத்திருக்க நடைபாதை வியாபாரிகள் அக்கறை காட்ட வேண்டும்,'' என்றார்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது: நடைபாதை வியாபாரிகளால் மக்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு விதிமுறையும், நெறிமுறையும் வகுக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக, மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதிகளில் நடைபாதையில் கடைகள் இருக்க கூடாது. பச்சை நிற ண்டலத்தில் கடை வைக்கலாம். மஞ்சள் நிற மண்டலத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கடை நடத்த அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே இந்த முறையில் கடை நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடைபாதை வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளோம். கடைகள் அமைக்கப்பட்ட பின், நடைபாதை கடைகளுக்கு வருவோரின் வசதிக்காக நடமாடும் கழிப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். நடைபாதை வியாபாரிகளின் வாழ்க்கை நலனுக்காக கடும் முயற்சி மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அதே நேரத்தில் வியாபாரிகளும் தங்களது பொறுப்பை உணர வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அன்சுல்மிஸ்ரா பேசினார்.

மாநகர போலீஸ் சட்டம் -ஒழுங்கு துணைக்கமிஷனர் நாகராஜன் பேசுகையில், ""ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல் லைக்குள்ளும் ஒரு வியாபார மையம் உருவாக்கி அங்கு கடைகளை அமைத்தால் மக்களுக்கு பிரச்னை ஏற்படாது,'' என்றார். இக்கூட்டத்தில், மாநகர போலீஸ் குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் காமினி உள்பட பலர் பேசினர். ஏராளமான நடைபாதை வியாபாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 10 February 2010 10:02