Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் இணைப்பு பெறாத ஓட்டலுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 14.02.2010

கழிவுநீர் இணைப்பு பெறாத ஓட்டலுக்கு 'சீல்'

சென்னை: முறையாக கழிவு நீர் இணைப்பு பெறாமல், கழிவு நீரை நேரடியாக கூவத்தில் கலக்கச் செய்த ஓட்டலுக்கு, மாநகராட்சியினர் நேற்று "சீல்' வைத்தனர். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர், நகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை செய்து, சுகாதாரச் சீர்கேடாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதில், 40க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு "சீல்' வைத்து மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். சுகாதாரத் துறையினர் தொடர்ந்து ஓட்டல்களிலும், டீக்கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல், கீழ்பாக்கம் மண்டல உதவி சுகாதார அதிகாரி ரேவதி தலைமையிலான குழுவினர் நேற்று கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 10 வருடங்களாக செயல்பட்டு வரும், "ஷான் ராயல்' ஓட்டலில் சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையில், ஆறு மாடிக் கட்டடத்தில் செயல்படும் அந்த ஓட்டலுக்கு முறைப்படி கழிவு நீர் இணைப்பு பெறாமல், அனைத்து வகையான கழிவு நீரையும், நேரடியாக பின்புறத்தில் உள்ள கூவம் ஆற்றில் விட்டிருப்பது தெரிந்தது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை கூவத்தில் விட்டதற்கு, மாநகராட்சி சட்ட விதிப்படியும், தமிழக பொது சுகாதார சட்டப்படியும், சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதோடு, ஓட்டலின் சமையல் அறைக்கும், உணவகத்திற்கும் "சீல்' வைத்தனர். இந்த ஓட்டல் நிர்வாகத்தினர், 16 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாகவும் மாநகராட்சியினர் தெரிவித்தனர்.