Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுக்குமாடி கட்டடங்களை வரைமுறைப்படுத்த உத்தரவு

Print PDF

தினமணி 03.03.2010

அடுக்குமாடி கட்டடங்களை வரைமுறைப்படுத்த உத்தரவு

பெங்களூர், மார்ச் 2: பெங்களூரில் ஏராளமான அடுக்குமாடிக் கட்டடங்கள் மாநகராட்சி, தீயணைப்புத் துறை விதிமுறைப்படி கட்டப்படவில்லை. அந்த கட்டடங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் விதிப்படி வரைமுறைப்படுத்த வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நகர காவல் துறை ஆணையர் சங்கர் பிதரி வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் கார்ல்டன் டவரில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மாநகராட்சியின் விதிமுறைப்படி கட்டடம் கட்டவில்லை, தீயணைப்பு கருவிகளையும், அவசரகால வழியை பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது.

இதுபோல நகரில் ஏராளமான கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதும், மாநகராட்சி, தீயணைப்புத்துறை அனுமதி, சான்றிதழ் இல்லாமல் ஏராளமான கட்டடங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. எனவே, நகரில் உள்ள உயரமான கட்டடங்கள் விதிமுறைப்படி தீயணைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் அதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.

பிறகு விதிப்படி கட்டடத்தை வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் மாற்றி அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறை விதிகளை இதுவரை பின்பற்றாத கட்டடங்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விதிப்படி மாற்றியமைக்க வேண்டும். அதே தேதிக்குள் தீயணைப்புக் கருவிகளை பழுதுபார்த்து பராமரித்துவைக்க வேண்டும். இனிமேல் கட்டப்படும் உயரமான கட்டடங்கள் மாநகராட்சி, தீயணைப்பு துறை அனுமதியுடன் விதிப்படி கட்ட வேண்டும்.

பொது மக்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் கட்டடங்களை வரைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 March 2010 09:47