Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: வியாபாரிகளிடம் ஆணையர் உறுதி

Print PDF

தினமலர் 18.03.2010

கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: வியாபாரிகளிடம் ஆணையர் உறுதி

புதுக்கோட்டை:17வது வார்டில் கழிவுநீர் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும் என ஆணையரிடம் வியாபாரிகள் வலியுறுத்தி பேசியதால் புதுகையில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் 17வது வார்டில் உள்ள தட்சிணாமூர்த்தி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக கழிவு நீர்வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே அடைப்பு ஏற்பட்ட பகுதியில் இடத்தின் உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்காததால் புதிய சாலைகள் மற்றும் கழிவு நீர்வாய்க்கால்கள் அமைக்க முடியாத நிலை என நகராட்சி தரப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராம்கணேஷ், நகரமைப்பு அலுவலர் பிச்சாண்டி ஆகியோருடன் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் 17வது வார்டுக்கு ஆய்வு செய்ய வந்தார். உடனே அப்பகுதி வியாபாரிகள் திரண்டனர்.

கழிவுநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அவரிடம் வலியுறுத்தி பேசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புகள் உடனடியாக சரி செய்து தரப்படும், மீண்டும் இப்பிரச்னை எழாத வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என நேற்று ஆணையர் பாலகிருஷ்ணன் உறுதியளித்ததன் பேரில் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

 

Last Updated on Thursday, 18 March 2010 06:59