Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு 'சீல்': ஆக்கிரமிப்பாளர்கள் ஓட்டம்

Print PDF

தினமலர் 19.03.2010

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு 'சீல்': ஆக்கிரமிப்பாளர்கள் ஓட்டம்

ஆர்.கே., நகர்: கொருக்குப்பேட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 17 வீடுகளை பூட்டி நேற்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். முன்கூட்டியே தகவல் அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை காலி செய்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் அருகில் குடிசை மாற்று வாரியத்தால் 2004ம் ஆண்டு, 434 குடியிருப்புகள் கொண்ட பாரதி நகர் அடுக்குமாடி திட்டப்பகுதி உருவாக்கப் பட்டது.அருகில் உள்ள ரயில் நிலையத்தை ஒட்டிய ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டு அங்கிருந்த 417 குடும்பங்களுக்கு பாரதி நகர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.அங்கு மீதமிருந்த 17 வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால், அவை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் பூட்டி இருந்தன.

நாளடைவில், அப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிலரின் ஆசியுடன், அந்த வீடுகளை ஆக்கிரமித்து சிலர் குடியேறினர். இதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய் பணத்தை அவர்களுக்கு ஆக்கிரமிப் பாளர்கள் கப்பம் கட்டியுள்ளனர்.பல ஆண்டுகள் ஆன நிலையில் தாமதமாக விழித்துக் கொண்ட குடிசைமாற்று வாரியம், ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அகற்ற முடிவு செய்தது.

குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் டேனியல் ஏசு அடியான், உதவி நிர்வாக பொறியாளர் மகேந்திரன், நிர்வாக அலுவலர் ராமராஜன் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நேற்று காலை அங்கு வந்தனர்.அப்போது, வண்ணாரபேட்டை உதவி கமிஷனர் குமார், ஆர்.கே.,நகர் இன்ஸ் பெக்டர் சரவண பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

குடிசை மாற்று வாரிய கட்டத்தில் அதிகாரிகள் நுழைந்தபோது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 17 வீடுகளும் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி திறந்து கிடந்தன.குடிசை மாற்று வாரியத்தினர் மற்றும் போலீசார் மூலம் முன்கூட்டியே தகவல் அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்து ஓட்டம் பிடித்திருந்தனர்.அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.இதேபோல இக்குடியிருப்புகளுக்கு வெளியே காலியாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து நான்கு குடிசை வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்து.அவற்றை பல குடியிருப்புகளாக பிரித்து 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பெற்று மாதம் 1,000 ரூபாய் வாடகையில் அதை சிலர் வாடகைக்கு விட்டிருந்தனர். அருகில் உள்ள வீட்டில் இருந்து அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.சிமென்ட் சாலை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அந்த குடிசை வீடுகளை பொக்லைன் வாகனம் மூலம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.இது குறித்து குடிசை மாற்றுவாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தற்போது 'சீல்' வைக்கப் பட்ட 17 வீடுகள், ஐகோர்ட் வழிகாட்டுதல்படி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதுவரை குடிசை மாற்று வாரிய கட்டுப் பாட்டில் இருக்கும். அங்கு, அத்துமீறி நுழைபவர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றார்.

Last Updated on Friday, 19 March 2010 06:17