Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி தாராபுரம் ஹோட்டலுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 30.03.2010

ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி தாராபுரம் ஹோட்டலுக்கு 'சீல்'

தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள ஹோட்டலை வருவாய் ஆய்வாளர் பூட்டி 'சீல்' வைத்தார். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் மோகன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அரசு பஸ்கள் உணவுக்காக பத்து நிமிடம் நின்று சென்றதால், பயணிகள் இந்த ஹோட்டலில் உணவு, டீ, காஃபி, தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டனர். ஹோட்டல் மற்றும் அருகிலுள்ள சிறிய கடைகளில் வியாபாரம் நன்றாக நடந்தது. தாராபுரம் - திண்டுக்கல் ரோட்டில் தனியார் மூலம் இரு மோட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு அரசு பஸ்களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவு, சிகரெட், 20 ரூபாய் டிப்ஸ், பார்சல் சாப்பாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதற்கு பதிலாக மோட்டல்களில் அரசு பஸ்கள் நின்று சென்றன.

பஸ் ஸ்டாண்டு ஹோட்டல் குத்தகைதாரர் நகராட்சிக்கு மாதம் 64 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும். ஆனால், நகராட்சிக்கு ஓராண்டாக வாடகை செலுத்தாமல் ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் பல மாதங்களாக வாடகை கட்ட கூறியும் பயனில்லை. மோகன் வாடகை கட்ட காலஅவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆறு வாரத்துக்குள் 50 சதம் வாடகை பாக்கியை கட்டவேண்டுமென உத்தரவிட்டது. இக்காலக்கெடுவும் 26ம் தேதியுடன் முடிந்த நிலையில், வாடகை கட்டாதததால் நேற்று காலை 11 மணிக்கு ஆர்.., இந்திராணி, வரி வசூலர் கணபதி, ஜெகதீஸ், கிராம நிர்வாக ஆய்வாளர் வெங்கடேஷன், சுகாதார ஆய்வாளர் பிச்சை, நாட்ராயன் ஆகியோர் கடையின் கதவை மூடி 'சீல்' வைத்தனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்கள் நிற்காமல், தனியாருக்கு சொந்தமான மோட்டல்களில் நிறுத்துவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தாராபுரம் நகராட்சிக்கு அரசு பஸ்கள் உணவுக்காக நின்று செல்லாததால் நகராட்சிக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Last Updated on Tuesday, 30 March 2010 09:22