Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின் சிக்கனத்திற்கு முன் மாதிரி திட்டம் புதிய தெருவிளக்குகளில் சிஎப்எல் மின் விளக்குகள்

Print PDF

தினமணி 30.03.2010

மின் சிக்கனத்திற்கு முன் மாதிரி திட்டம் புதிய தெருவிளக்குகளில் சிஎப்எல் மின் விளக்குகள்

களியக்காவிளை, மார்ச் 29: மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் நோக்கத்தில் களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் புதிதாக பொருத்தப்படும் தெருவிளக்குகளில் சி.எப்.எல். மின் விளக்குகளை பொருத்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் மன்றத் தலைவி எஸ். இந்திரா தலைமையில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார்.

இதில், பேரூராட்சி பராமரிப்பில் உள்ள கிராமச் சாலைகள், வழிப் பாதைகளில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என 8-வது வார்டு உறுப்பினர் என். விஜயேந்திரன் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத் தீர்மானத்திற்கு பதிலளித்த செயல் அலுவலர், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தலா 10 மின் விளக்குகள் புதிதாக போடவும், அவற்றில் குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் சி.எப்.எல். மின் விளக்குகளை பொருத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இத் தீர்மானம் மன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 2-வது வார்டு உறுப்பினர் என். விஜயானந்தராம், நெய்யாறு இடதுகரை கால்வாயை தூர்வாரினால் கேரளத்திலிருந்து கசிந்து வரும் நீரால் களியக்காவிளை பேரூராட்சி முழுவதும் பயனடையும். இதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்றார். இதற்கு பதிலளித்த செயல் அலுவலர், இதில் பொதுப்பணித் துறை மட்டுமே வேலை செய்ய முடியும் என்பதால் இது குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றார்.

12-வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.. கமால், களியக்காவிளையில் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பெரும்பாலான நாள்களில் அரை மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றார். இதற்கு பதிலளித்த செயல் அலுவலர், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்கும் இந்த நீரையே பயன்படுத்துவதால் அதிக தேவை ஏற்படுகிறது. இதனால் குறைந்த நேரத்திலேயே தண்ணீர் தீரும் என்றார். தொடர்ந்து, உறுப்பினர் என். விஜயேந்திரன், அவசர கூட்டம் நடத்தி குடிநீர் பற்றாக்குறை சம்பந்தமாக விவாதித்து முடிவு காண வேண்டும் என்றார். இதையே பெரும்பாலான உறுப்பினர்களும் கோரினர். தேவையென்றால் அவசர கூட்டம் நடத்தலாம் என மன்றத் தலைவி இந்திரா கூறினார்.

இதைத் தொடர்ந்து, பேரூராட்சி 2-வது வார்டில் படிப்பகம் கட்ட வேண்டும். 8-வது வார்டில் திடக்கழிவு கொட்டகை சாலையில் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதார வசதி கருதி மாவட்ட ஆட்சியரின் நிதி பெற்று வடிகால் ஏற்படுத்த வேண்டும். களியக்காவிளை பேருந்து நிலையத்தில் குடிதண்ணீர் வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் சலாவுதீன், வார்டு உறுப்பினர்கள் ஜெலின்பியூலா, பத்மினி, தேவராஜ், ராயப்பன், . ராஜு, சந்திரன், என். விஜயேந்திரன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 30 March 2010 11:23