Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிப்பு

Print PDF

தினமணி 01.04.2010

மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிப்பு

தூத்துக்குடி, மார்ச் 31: தூத்துக்குடியில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடை காலம் தொடங்கி விட்டதால் தூத்துக்குடி மாநகருக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையில் இருந்து வரக்கூடிய குடிநீரின் அளவு குறைந்துள்ளது, மேலும், சுழற்சி முறையில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக நகரில் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரானது நகரின் கடைசிப் பகுதி வரை சென்றடையாத சூழ்நிலை காணப்படுகிறது.

எனவே, மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி வரும் நபர்கள் உடனடியாக மின் மோட்டாரை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தவறும்பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் குடிநீர் குழாய் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படுவதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும், குடிநீர் விநியோக அரசாணைகளின்படி ரூ. 7000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோகம் கோடை காலத்திலும் சிறப்பாக நடைபெற ஏதுவாக குடிநீர் பணியாளர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு மூலம் இம் மாதம் 5-ம் தேதி முதல் நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நேராய்வு செய்து, விதிமுறைகளுக்கு புறம்பாக மாநகராட்சி குடிநீர் பிரதான குழாய்களில் இருந்து மாநகராட்சி அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள், மாநகராட்சி அனுமதியின்றி வீட்டு இணைப்பில் இருந்து விதிமுறைகளுக்கு முரணாக குடிநீர் விற்பனை செய்வது

மற்றும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வரும் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க மாநகராட்சி மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும், கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Thursday, 01 April 2010 10:30