Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ்மென்ட் வீக்': கட்டட எடையை குறைக்க சுவர்கள் இடிப்பு டூ பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிப்பு

Print PDF

தினமலர் 07.04.2010

'பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ்மென்ட் வீக்': கட்டட எடையை குறைக்க சுவர்கள் இடிப்பு டூ பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிப்பு

கோவை: கோவை அம்மன் குளம் பகுதியில் மண்ணில் புதைந்து வந்த அடுக்கு மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழாமல் இருக்க, கட்டடத்தின் சுற்றுச் சுவர்கள் மட்டும் நேற்று இடிக்கப்பட்டன. நவீன கருவி மூலம், கட்டடம் அருகில் துளையிட்டு, 'போர்வெல் இன்வெஸ்டிகேஷன்' நடத்தப்பட்டது. மண் மாதிரி முடிவு கிடைத்தபின், கட்டடத்தை முழுமையாக இடிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அம்மன் குளத்தில், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்படி, வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 936 வீடுகள் கட்டப்படுகின்றன. ஈரோட்டை சேர்ந்த 'எஸ்.பி. சுந்தரசாமி அன் கோ' எனும் கட்டுமான நிறுவனத்தினர், ஒப்பந்த முறையில் பணி மேற்கொண்டு வருகின்றனர். 22 கோடி ரூபாய்க்கு இந்த பணிகளை நிறைவேற்ற இந்நிறுவனம் ஒப்புக் கொண்டதின் அடிப்படையில், 2008 ஜூன் முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 அடுக்குமாடி குடியிருப்புகள், 15 ஏக்கரில் கட்டப்படுகின்றன. 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், ஒரு கட்டடம் மண்ணுக்குள் புதைவது தெரியவந்தது. நேற்று முன் தினம் மாலை 5.30 மணி வரை தரைத்தளத்தில் இருந்து 50 செ.மீ., வரை, கட்டடம் மண்ணுக்குள் புதைந்திருந்தது. நேற்று காலை அளவிட்டபோது, 56 செ.மீ., புதைந்திருந்தது கண்டறியப்பட்டது. கட்டடம் வேகமாக மண்ணுக்குள் புதைவதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் இறங்கினர். ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டடத்தின் பின்புறம் இரண்டு இரும்புக்குழாய்கள், ஆதரவாக முட்டு கொடுக்கப்பட்டன. மதியம் இந்த பணி முடிவடைந்தபோது, கட்டடம் மேலும் 2 செ.மீ., புதைந்திருந்தது.அடுத்தபடியாக, கட்டடம் மேற்கொண்டு புதைவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அதன் எடையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி செங்கற்களால் ஆன கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

அஸ்திவாரத்தின் அடியில் உள்ள மண்ணில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய, பிற்பகலில் ஈரோட்டில் இருந்து நவீன 'போரிங் கருவி' தருவிக்கப்பட்டது. முதலில் கட்டடம் சாய்ந்து வரும் பகுதியில், அஸ்திவாரத்தில் இருந்து 12 மீட்டர் கீழே துளையிட்டு மண் சேகரிக்கப்பட்டது. இதற்கென காத்திருந்த கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள், மண்ணின் மாதிரிகளை அங்கேயே ஆய்வு செய்தனர். கோவை குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் கோபி கூறுகையில், ''இங்கு கட்டப்பட்டு வரும் அனைத்துக் கட்டடங்களின் மண்ணும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளது. புதையும் கட்டடத்தின் அஸ்திவார மண்ணை ஆய்வு செய்ததில், அந்த மண் 'கான்கர்'(மொரம்பு) வகையை சார்ந்தது என தெரிய வந்துள்ளது. இவ்வகை மண் கடினமான எடையை தாங்கும் சக்தி கொண்டது. ''அஸ்திவாரத்தின் அடியில் உள்ள மண்ணின் ஆய்வு அறிக்கை வந்தால் தான் கட்டடம் புதைவதன் மர்மம் தெரிய வரும். அதன் அடிப்படையில் அருகில் உள்ள கட்டடத்துக்கும் பாதிப்பு வருமா என தெரியும். புதைந்து வரும் கட்டடத்தை இடிப்பது பற்றி தமிழக முதல்வர், அமைச்சர்கள் மட்டத்தில் முடிவு செய்யப்படும்,'' என்றார். இந்நிலையில் புதையும் கட்டடத்தை நேற்று காலை குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். பொறியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மண் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை துல்லியமாக நடத்தப்பட வேண்டும். ஆய்வில் அக்கட்டடத்தின் அடியில் மண்ணின் தன்மை ஏற்றதல்ல என தெரிய வந்தால், இக்கட்டடத்தை இடித்து விட்டு வேறு இடத்தில் கட்டலாம்,'' என்றார்.
நஷ்டத்தை ஒப்பந்ததாரர் ஏற்கணும்: மாநகர குழுத்தலைவர் கோரிக்கை :

கோவை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் ராமசாமி, கவுன்சிலர்களுடன் நேற்று புதையும் கட்டடத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''தண்ணீர் தேங்கிய இடம் என்பதால் இங்கு வீடு கட்டக்கூடாது என கூறுவது தவறு. ஐந்து அடி ஆழம் தோண்டியிருந்தாலும், 'புட்டிங் கான்கிரீட்' போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.

கட்டடம் ஸ்ட்ராங் ஆகதான் உள்ளது. அஸ்திவார கான்கிரீட்டை சிறிது யோசனை செய்து நன்கு போட்டிருக்கலாம். இந்த கட்டடத்தை இடித்தபின் புதிய கட்டடத்தை இதே இடத்தில் கட்டலாம். இதுவரை செலவாகியுள்ள செலவை கட்டட ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டிய நிலைமை வரும்,'' என்றார். இது பற்றி எஸ்.பி.எஸ். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரசாமியிடம் கேட்டதற்கு, ''அஸ்திவாரம் 'ஸ்ட்ராங்' ஆக போடப்பட்டுள்ளது. மோசமாக போட்டிருந்தால் கட்டட சுவர்களில் விரிசல் விழுந்திருக்க வேண்டும். அல்லது பிற கட்டடங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கும். அனைத்துக் கட்டடங்களும் 1.50 கோடி ரூபாய்க்கு 'காப்பீடு' செய்யப்பட்டுள்ளதால் கவலை இல்லை,'' என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:31