Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சிகளில் சட்டவிரோத குடிநீர் இணைப்பு காவேரிபுரம் பஞ்.,ல் 10 இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 08.04.2010

உள்ளாட்சிகளில் சட்டவிரோத குடிநீர் இணைப்பு காவேரிபுரம் பஞ்.,ல் 10 இணைப்பு துண்டிப்பு

மேட்டூர்: உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மெயின் குழாயில் இருந்து ஏராளமானோர் வீடுகளுக்கு குடிநீர் எடுப்பதால், கொளத்தூர் டவுன்பஞ்., கிராமபுறங்களில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவேரிபுரம் பஞ்., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பத்து இணைப்புகளை துண்டித்துள்ளனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர் டவுன்பஞ்., 15 வார்டு உள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 250 பேர் வசிக்கின்றனர். தற்போது டவுன்பஞ்.,ல் 250 பொது குடிநீர் இணைப்புகள், 2,025 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளது. காவிரியில் இருந்து தினமும் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொளத்தூருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கொளத்தூர் ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்துகள் உள்ளது. 68 ஆயிரத்து 836 பேர் வசிக்கின்றனர். பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் தினமும் 25 லட்சம் லிட்., காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர்வாரியம் சுத்திகரித்து தரும் குடிநீருக்கு லிட்டருக்கு 3 காசு வீதம் பஞ்சாயத்து நிர்வாகம் கட்டணம் செலுத்துகிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளாட்சி அனுமதி பெறாமல், முன்பணம் கட்டாமல் தாங்களாகவே பொதுகுழாயில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர். சில இடங்களில் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லும் மெயின் குழாயில் இருந்தே வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளதால், தொட்டிக்கு செல்ல வேண்டிய குடிநீரின் ஒரு பகுதி தனிப்பட்ட நபர்களின் வீட்டுக்கு சென்று விடுகிறது.

அதனால், போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதாலும், கிராம புறங்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய முடிவதில்லை. கொளத்தூர் ஒன்றிய பஞ்சாயத்துகளில் பல ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இதர மக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். கொளத்தூர் டவுன் பஞ்., குடிநீர் பற்றாக்குறையால் பாதித்த அண்ணாநகர் மக்கள் கடந்த 5ம் தேதி மாலை பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலைமறியலில் ஈடுபட்டனர். நேற்று காலை 4வது வார்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டவுன்பஞ்., தலைவர் நடராஜன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.

இந்நிலையில், குடிநீரை சட்டவிரோதமாக பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுக்க முதல் கட்டமாக காவேரிபுரம் பஞ்.,ல் நேற்று முன்தினம் பஞ்., தலைவர் பாலசிங்கம், குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மாணிக்கம், போலீஸார் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது கோவிந்தபாடியில் இருந்து அரிசிபாளையம் மேல்நிலை தொட்டிக்கு செல்லும் மெயின்குழாயில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட நான்கு குடிநீர் இணைப்புகள், சத்யாநகரில் இருந்து மாமரத்துக்காடு தொட்டிக்கு செல்லும் குழாயில் இருந்து எடுத்த 5 குடிநீர் இணைப்பு, கத்திரிப்பட்டி மெயின் குழாயில் இருந்து எடுத்த ஒரு இணைப்பு உள்பட 10 இணைப்புகளை குழுவினர் துண்டித்தனர்.

இதுபோன்ற சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதால், அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கிறது. கொளத்தூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 08 April 2010 06:54