Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியாற்றில் குடிநீருக்காக விடப்பட்ட தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்; மின் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 13.04.2010

பெரியாற்றில் குடிநீருக்காக விடப்பட்ட தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்; மின் இணைப்பு துண்டிப்பு

கம்பம், ஏப்.12: தேனி மாவட்டம், பெரியாற்றில் இருந்து குடிநீருக்காகத் திறந்துவிடப்படும் நீரை,சிலர் திருடப் பயன்படுத்திய மோட்டார் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில், பொதுப்பணித் துறையினர் தலைமையிலான அதிகாரிகள் கூட்டாக மேற்கொண்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் தமிழகத்திற்கு பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டத்தில் தேவைக்கேற்ப குடிநீருக்காக மட்டும் இறைச்சல் பாலத்தின் வழியாக குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதிக்கு சரியாக குடிநீர் கிடைக்கவில்லை என்றும், வரும் வழியில் குடிநீர் திருடப்படுவதாகவும் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன் குடிநீரைத் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொதுப்பணித் துறையின் உதவிச் செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவிப் பொறியாளர்கள் சந்தனக்குமார், மகேந்திரன் ஆகியோரது தலைமையில், உத்தமபாளையம் வட்டாட்சியர் மனோகரன், மின்சார வாரிய உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன், லோயர்கேம்ப், கூடலூர் காவல்நிலைய போலீஸôர் கொண்ட குழுக்கள், கூடலூர்- குமுளி சாலையில் குறுவனத்துப் பாலத்தின் மேல்புறம் பெரியாற்றில் 2 மோட்டார்களில் தண்ணீர் திருடப்பட்டதைக் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, வெட்டுக்காட்டுப் பகுதியில் 3 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரியாற்றில் தண்ணீர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உறை கிணறுகள், மோட்டார் பெட்கள் உடைக்கப்பட்டன. இதேபோல, விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் 6 இலவச மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் துண்டித்தனர்.

புதன்கிழமையும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:47