Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைத்து கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்! : மே 31ம் தேதிக்குள் வைக்க மாநகராட்சி கெடு

Print PDF

தினமலர் 16.04.2010

அனைத்து கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்! : மே 31ம் தேதிக்குள் வைக்க மாநகராட்சி கெடு

சென்னை : 'சென்னையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வரும் மே 31ம் தேதிக்குள் மாற்றி எழுத வேண்டும்' என்று மேயர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் பெயர் பலகைகளில், தமிழ் பிரதானமாக இருக்கும் வகையில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் மேயர் சுப்ரமணியன் அறிவித்தார்.வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் முதன்மையாக இடம் பெறுதல் குறித்து நேற்று, வணிக சங்க பிரதிநிதிகளுடன் தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலையரங்கில் கலந்தாய்வு நடந்தது. மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வணிகத் துறை கூடுதல் கமிஷனர் முத்துவீரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் குமார், தபால் துறை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில், மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, சென்னையில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத் தப்படுகிறது. வரும் மே 31க்குள், பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இடம் பெறும் வகையில் எழுத வேண்டும். தேவைப்பட்டால், மற்ற மொழியில் சிறிதாக எழுதிக் கொள்ளலாம். வணிக நிறுவனங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழ் படுத்தி எழுதாமல், தூய தமிழில் எழுத வேண்டும். தமிழ்வாணன் போட்டோ ஸ்டூடியோ என்பதை அப்படியே தமிழில் எழுதாமல் தமிழ்வாணன் நிழற்பட நிலையம், மூவேந்தர் டெக்ஸ்டைல்ஸ் என்பதை மூவேந்தர் துணியகம் என்றும் எழுத வேண்டும். இல்லையேல், வரும் ஜூன் 1ம் தேதி முதல், மாநகராட்சி அந்த பெயர் பலகைகளை அகற்றும்.

இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார். கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வணிக சங்க பிரதிநிதிகளுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள தூய தமிழ் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மேயர் சுப்ரமணியன் வினியோகித்தார்.

Last Updated on Friday, 16 April 2010 06:24