Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழில் பெயர் பலகை : சென்னையை பின்பற்றுமா மதுரை மாநகராட்சி : சங்கம் வைத்த மதுரையில் தமிழ் கட்டாயமாகுமா

Print PDF

தினமலர் 17.04.2010

தமிழில் பெயர் பலகை : சென்னையை பின்பற்றுமா மதுரை மாநகராட்சி : சங்கம் வைத்த மதுரையில் தமிழ் கட்டாயமாகுமா

மதுரை : சென்னை மாநகராட்சியைப் போல, 'அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைப்பதை' மதுரை மாநகராட்சியும் கட்டாயமாக்க வேண்டும்.கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ளது. 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கத்துடன், மாநாட்டையொட்டி தமிழ் வளர்ச்சிக்காக, பல்வேறு அரசு துறைகள் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்கின்றன. இந்த வகையில் சென்னை மாநகராட்சி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும்' என்பதே அந்த உத்தரவு. இதற்காக சென்னையில் அனைத்து வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை மேயர் சுப்பிரமணியன் கூட்டினார். அதில் பேசிய அவர், 'பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இடம் பெற வேண்டும். தேவைப்பட்டால் மற்ற மொழி எழுத்துக்களை சிறிதாக எழுதிக் கொள்ளலாம். மே 31க்குள் அனைத்து பெயர் பலகைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். பெயர்களை அப்படியே தமிழ்ப்படுத்தாமல், தூய தமிழுக்கு மாற்ற வேண்டும். உதாரணமாக 'ஸ்டுடியோ' என்பதை 'நிழற்பட நிலையம்' எனவும், 'டெக்ஸ்டைல்ஸ்' என்பதை 'துணியகம்' எனவும் மாற்ற வேண்டும்' எனக்குறிப்பிட்டார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும் இதுபோன்ற முயற்சியை மாநகராட்சி மேற் கொள்ள வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இது குறித்து கேட்டபோது: மேயர் தேன்மொழி: சென்னையைப் போல மதுரையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்காக மதுரையில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூட்டம் கூட்டப்படும். அடுத்து நடக்க இருக்கும் மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் கொண்டு வரப்படும்.

கமிஷனர் செபாஸ்டின்: இது போன்ற அரசாணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. இருப்பினும் மாநகராட்சியில் இவ்வுத்தரவு கட்டாயமாக்கப்படும். உத்தரவுக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கப்படும்

துணை மேயர் மன்னன்: தமிழ் உணர்வுடன் வர்த்தகர்கள் தாமாகவே முன் வந்து தமிழில் பெயர் பலகை வைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இருப்பினும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவோம்.
வர்த்தக சங்கங்கள் கருத்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் :பெரும்பாலான நிறுவனங்கள் அரசு உத்தரவுபடிதான் பெயர் பலகைகள் வைத்துள்ளன. தூயத் தமிழில் பெயர் வைப்பதில் ஆட்சேபணை இல்லை. அதேசமயம் மக்களுக்கு புரியும்படி வைத்தால்தான் வியாபாரம் பாதிக்காமல் இருக்கும். எனவே தூயத் தமிழில் பெயர் பலகை வைப்பது அவரவர் விருப்பம் என்று சலுகை தரவேண்டும்
.

மதுரை ஓட்டல் சங்கத் தலைவர் குமார் : ஓட்டல்களில் தமிழில்தான் பெயர் வைத்துள்ளோம். ஆங்கில எழுத்தில் உள்ள பெயர் பலகைகளை, தமிழில் மாற்றி எழுத அறிவுறுத்தி உள்ளோம். வியாபாரத்தை பாதிக்காத வகையில், தூயத் தமிழில் பெயர் பலகைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு ரெடிமேட் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கணேஷ் : தமிழில்தான் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும்கூட. இதுதொடர்பாக அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். தூயத் தமிழில் பெயர் பலகை வைப்பது என்பது சில கடைகளுக்கு ஒத்துவராது. இதுதொடர்பாக சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் : இங்கு தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற கருத்து உள்ளது. இதை போக்க, பெயர் பலகையில் தமிழ்தான் பிரதானமாக இடம்பெற வேண்டும் என்பது எங்கள் சங்கத்தின் கருத்து. அதேசமயம் தூயதமிழில் வைத்தால் குழப்பம் ஏற்படும். இதை தவிர்க்க, பேச்சு வழக்கில் பெயர் பலகைகளை வைக்க அனுமதிக்க வேண்டும்.

Last Updated on Saturday, 17 April 2010 06:36