Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டியில் அனுமதியற்ற கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமலர் 23.04.2010

ஊட்டியில் அனுமதியற்ற கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்புகள் துண்டிப்பு

ஊட்டி: ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர், மின் இணைப்பை துண்டிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று துவங்கின. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; இந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விதிமீறி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் படி, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 985 கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து முடிக்க 6 மாத அவகாசம் வேண்டும் என ஊட்டி நகராட்சி கமிஷனர், கடந்த பிப்ரவரியில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, அனுமதியின்றி கட்டப்பட்ட 985 கட்டடங்கள் பட்டியலை தயாரித்து 25ம் தேதிக்குள் இந்த கட்டடங்களுக்கான மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இப்பணிகளை மேற்கொள்ள போதிய பாதுகாப்பு வழங்க, மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டது. கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடர்பான கூட்டம் நடந்தது. நகராட்சி கமிஷனர் கிரிஜா, நகர திட்ட அலுவலர் சவுந்திரராஜன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, கமிஷனர் கிரிஜா உத்தரவின் பேரில் பொறியாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில் அனுமதியற்ற கட்டடங்களில் தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் பணியை துவக்கினர். ஊட்டி சவுத்விக், குன்னூர் ரோடு, கோடப்பமந்து ஆகிய பகுதிகளில் இளநிலை பொறியாளர் கோபிகா மற்றும் நகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணிகளை மேற்கொண்டனர். டி.எஸ்.பி., அசோக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் திருமேனி, சத்தியநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை, உதவி பொறியாளர் சிவகுமார் தலைமையில் மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பான ஆயத்த பணிகள் நடந்தன. 1993ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.

குழப்பும் நகராட்சி : கடந்த 1993ம் ஆண்டு முதல் அனுமதியற்ற கட்டப்பட்ட கட்டடங்களின் தண்ணீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரியத்துக்கு நகராட்சி சார்பில் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முகவரி உள்ளதே தவிர, மின் இணைப்பு எண் இல்லை. நகராட்சியின் வரி ரசீதின் அடிப்படையில் தான் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி கொடுத்த பட்டியலால் மின்வாரியத்தினர் குழம்பி போய் உள்ளனர்.