Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை நகராட்சியிடம் கையேந்தும் கிராம ஊராட்சிகள்

Print PDF

தினமலர் 28.04.2010

உடுமலை நகராட்சியிடம் கையேந்தும் கிராம ஊராட்சிகள்

உடுமலை : 'மூன்று ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க உடுமலை நகராட்சியில் செயல்படுத்தவுள்ள மூன்றாவது குடிநீர் திட்டத்தில் இணைக்க வேண்டும்' என மூன்று ஊராட்சி தலைவர்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை நகராட்சி எல்லையில் உள்ளது பெரியகோட்டை, கணக்கம்பாளையம், போடிபட்டி ஊராட்சிகள் இப்பகுதிக்கு கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது, இப்பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உருவாகி வருவதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் நீடிக்கிறது. இதை சமாளிக்க உடுமலை நகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள மூன்றாவது குடிநீர் திட்டத்தில் இணைத்து குடிநீர் வழங்க கோரி மூன்று ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், துணை முதல்வர், பொள்ளாச்சி எம்.பி., உடுமலை எம்.எல்.., உடுமலை நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: பெரியகோட்டை, கணக்கம்பாளையம், போடிபட்டி ஊராட்சிகளில், கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 91ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், இத்திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பற்றாக்குறைக்கு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. கடுமையாக நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உடுமலை நகராட்சிசெயல்படுத்தவுள்ள மூன்றாம் குடிநீர் திட்டத்தில், கணக்கம்பாளையம், போடிபட்டி, பெரியகோட்டை ஊராட்சியை இணைக்க வேண்டும். தற்போதுள்ள மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல், திட்டத்தை வடிவமைத்து நகராட்சியின் மூன்றாவது குடிநீர் திட்டத்தில், குடிநீர் வழங்க வேண்டும். நகராட்சி நிர்ணயம் செய்யும் மாதாந்திர கட்டணத்தொகையை செலுத்துவதற்கு தயாராக உள்ளோம்.

Last Updated on Wednesday, 28 April 2010 06:16