Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கைகள் தொடருமா: புதிய கமிஷனரிடம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள்

Print PDF

தினமலர் 28.04.2010

மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கைகள் தொடருமா: புதிய கமிஷனரிடம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள்

சென்னையில் சுனாமி மீட்பு பணி டி.ஆர்.ஓவாக இருந்த பாஸ்கரன் கடந்த செப்டம்பர் மாதம் நெல்லை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றவுடன் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இவரது அதிரடிகள் சிலருக்கு கஷ்டத்தை தந்தாலும் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் தண்ணீர் பிரச்னை சம்பந்தமான மனுக்களே பொதுமக்களிடம் இருந்து அதிகம் வந்தன. மேலும் மாநகராட்சி கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் தண்ணீர் பிரச்னை குறித்தே பேசினர். வீடுகளில் குடிநீர் குழாயில் மோட்டார் பொறுத்தப்பட்டிருப்பதும் குடிநீர் பிரச்னைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அறிந்த கமிஷனர் அதை தயவு தட்சாணியமின்றி பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி சுமார் 200 மின் மோட்டார்கள் இவரது நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டன.ஊழியர்கள் கூண்டோடு நள்ளிரவில் மாற்றம்: நெல்லை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவரையும் மாற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்படி ஒரே நாள் நள்ளிரவில் 177 ஊழியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதே போல் உதவிக்கமிஷனர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மேஸ்திரிகள், டிரைவர்கள், மேயர், கமிஷனரின் நேர்முக உதவியாளர்கள் என 70க்கும் மேற்பட்டவர்கள் மண்டலங்களுக்குள் ஒரே நாள் இரவிலேயே மாற்றப்பட்டனர். இது மாநகராட்சி வட்டாரத்தில் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய ஆளும் கட்சி விஐபிக்களையும், அதிகாரிகளை பிடித்து மீண்டும் அதே இடத்திற்கு வர முயற்சி செய்தனர். ஆனால் கமிஷனர் அதற்கு மறுத்துவிட்டார். கமிஷனரின் நள்ளிரவு அதிரடி முடிவுகள் பலருக்கு தூக்கத்தை கலைத்தது. மாநகராட்சி பணியாளர்கள் சங்க நடவடிக்கைகளையும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அடக்கிவாசிக்க செய்தார்.

6 மாதத்தில் ரூ.32 கோடி வரிவசூலில் சாதனை: நெல்லை மாநகராட்சியில் 2008-09ம் ஆண்டில் ரூ.34.31 கோடி சொத்துவரி கேட்பு இருந்தது. அதில் ரூ.10.61 கோடி மட்டுமே வசூலானது. ரூ.23.62 கோடி பாக்கி இருந்தது. 2009-10ம் ஆண்டில் ரூ.42.98 கோடி கேட்பு இருந்தது. ரூ.20.09 கோடி வசூலானது. ரூ.22.89 கோடி பாக்கியுள்ளது. பாஸ்கரன் கமிஷனராக பதவி வகித்த 6 மாதத்தில் மட்டும் மாநகராட்சிக்கு பல இடங்களில் வசூலாகமல் இருந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்றும் ரூ.32 கோடி வரை வசூலித்து மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டியுள்ளார். இது மாநகராட்சி வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என்பது ஒட்டுமொத்த அலுவலர்களின் கருத்து. இதே போல் குடிநீர் வரி, தொழில் வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலமாகவும் மாநகராட்சிக்கு வசூல்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.

நெல்லையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் ஆய்வு பணிக்கு ரூ.1.90 கோடி அனுமதி மற்றும் குடிநீர் விரிவாக்க திட்டங்கள் அனுமதிக்காகவும் சென்னையில் அதிகாரிகளை நேரடியாக சந்திந்து திட்டங்களை பெறுவதில் முனைப்புடன் செயல்பட்டார். கோடை காலம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தினாலும் லாரிகளில் தண்ணீர் கொடுக்க கூடாது என உத்தரவிட்டு, தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். எந்தெந்த பகுதிக்கு எத்தனை மணிக்கு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை அட்டவணை வெளியிட்டு டிரைவர்களுக்கு வழங்கினார். இதனால் குடிநீர் விநியாகம் ஒரளவுக்கு சீரானது.

வாகன காப்பகம்: நெல்லை புதுபஸ்ஸ்டாண்டில் தனியார் நடத்திவந்த வாகன காப்பகத்தில் பொதுமக்களிடம் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் வந்தன. பெட்ரோல் திருட்டும் அடிக்கடி நடந்துவந்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த வாகன காப்பகத்தை மாநகராட்சியே நடத்தவும், அதில் பணியாளர்களை நியமித்து 24 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் ஸ்மார்ட் கார்டு முறை கொண்டு வரப்பட்டு வாகனங்களுக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைத்தது மட்டுமின்றி வாகன காப்பகம் முறைப்படுத்தப்பட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

உணவு கலப்படம்: ஓட்டல்களில் சுகாதாரமான உணவுகள் வழங்குதல், பழக்கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை, கடைகளில் சுகாதாரமான பொருட்கள் விற்பனை, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பணிகளிலும் கமிஷனர் தீவிர கவனம் செலுத்தினார். இதனால் உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்கிடாக்கி: மாநகராட்சி அலுவலர்களிடையே செல்போனில் அடிக்கடி தொடர்பு கொள்வதால் ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்தவும், ஒரே நேரத்தில் அனைவரிடமும் தகவல்களை பரிமாறிக் கொள்ள வசதியாக மேயர், துணைமேயர், மண்டல தலைவர்கள், கமிஷனர், உதவிக்கமிஷனர், பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என அனைவருக்கும் ரூ.15 லட்சம் செலவில் வாக்கிடாக்கி வழங்கப்பட்டது. வாக்கி டாக்கி வழங்கப்பட்டாலும் இதில் ஒவ்வொருவருடைய பணிகளையும் வாக்கிடாக்கியில் பேசி கண்காணித்து வந்தார். குறிப்பாக குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதனால் நீரேற்று நிலையங்களில் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

பிரச்னைகளும் உடனுக்குடன் சமாளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி அலுவலர்களின் வாக்கிடாக்கி எப்.எம்.ரேடியோ போல் எப்போதும் அலறிக் கொண்டிருந்தது. தற்போது கமிஷனரின் மாற்றத்தால் அந்த வாக்கிடாக்கிகள் ஓய்வு எடுக்க துவங்கியுள்ளன.
கமிஷனரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு மாநகராட்சி மேல் மட்டத்திலும், கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டத்திலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இருந்தாலும் எதற்கு கமிஷனர் அசைந்து கொடுக்காததால் கமிஷனரின் நடவடிக்கைகளை தாங்களாகவே முன்வந்து பாராட்டு துவங்கினர். ஆனாலும் எதிர்ப்பையோ, பாராட்டையோ கமிஷனர் பொருட்படுத்தவில்லை. கமிஷனரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது.

மைனஸ் பாய்ண்ட்: கமிஷனர் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அவருடைய பேச்சு தொணியும், அணுகுமுறையும் பலரை சங்கடப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுன்சிலர்களிடம் அணுகுமுறை, அதிகாரிகள், அலுவலர்களிடம் எப்போதுமே கண்டிப்புடன் பேசுவாராம். மாநகராட்சியில் பணியாளர்கள் பாதிக்கும் மேல் பற்றாக்குறை உள்ள நிலையில் வேலைப்பளுவை அதிகரித்துவிட்டதாக ஊழியர்கள் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. ஒரே நேரத்தில் 177 ஊழியர்கள் மாற்றப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், ஒரே இடத்தில் ஒரே செக்ஷனில் நீண்ட நாட்கள் பணியாற்றியவர்களை மற்ற வேலைகளே தெரியாத செக்ஷனில் போட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், அதை இன்னும் ஊழியர்கள் பலர் சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் புலம்பல்கள் கேட்கின்றன.

மேலும் சமீபத்தில் நெல்லை வந்த ஸ்வீடன் நாட்டிலில் பணியாற்றும் தொழிற்சங்க குழுவினருக்கு தலைமை செயலாளர் அனுமதி கடிதம் இல்லாததால் ராமையன்பட்டி குப்பை கிடங்குகளை பார்வையிட அனுமதி மறுத்துவிட்டதாகவும், தீயணைப்பு வாகனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொள்ள அனுமதி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பத்திரிகையாளர்களிடமும் கமிஷனர் கண்டிப்பு காட்டியதாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கமிஷனரின் நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களாக அமைந்தன. கமிஷனரை நாங்கள் தான் மேலிடத்தில் சொல்லி மாற்றச் செய்தோம் என சிலர் மார்தட்ட துவங்கியுள்ளனர். இருப்பினும் கமிஷனர் தற்போது சென்னை முதல்வரின் தனிப்பிரிவு டி.ஆர்.ஓவாகவும், செய்தித்துறை இயக்குனர் (பொ) நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனர் சிறப்பாக பணியாற்றியதால் தான் முதல்வரின் தனிப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

நடவடிக்கைகள் தொடருமா!: கமிஷனர் பாஸ்கரனின் நடவடிக்கைகளை சிலர் விமர்சித்தாலும், பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் நன்மையாகவே அமைந்தது என்றே கூறவேண்டும். நெல்லையில் சுதீப்ஜெயின், தீரஜ்குமார், ஹர்மந்தர்சிங் என ஐ..எஸ்.அதிகாரிகள் கமிஷனராக இருந்த போதிலும், கமிஷனர் பாஸ்கரன் நடவடிக்கைகள் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது என்றே சொல்லவேண்டும். பொதுமக்களுக்கும், மாநகராட்சிக்கும் பயனளிக்க கூடிய திட்டங்களை செயல்படுத்தக் கூடியவரை கமிஷனராக நியமிக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் கமிஷனர் எடுத்த நல்ல திட்டங்களும், அதிரடி நடவடிக்கைகளும் தொடரவேண்டும் என்பதும் மக்களின் விருப்பம்.

-நமது சிறப்பு நிருபர்-

Last Updated on Wednesday, 28 April 2010 06:33