Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு சேவை தொடக்கம்

Print PDF

தினமணி 30.04.2010

நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு சேவை தொடக்கம்

திருநெல்வேலி, ஏப். 29: தமிழக மாநகராட்சிகளிலேயே முதன் முதலாக திருநெல்வேலியில் வாகன காப்பகத்தில் "ஸ்மார்ட் கார்டு' சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தை தனியார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இந்தாண்டு மிகவும் குறைந்த விலைக்கு தனியார் குத்தகைக்கு கேட்டதால், அதை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துவிட்டு வாகன காப்பகத்தை தானே நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகமே நடத்தி வருகிறது.

வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகம் நிர்வகிக்க தொடங்கிய உடன் முறைகேடுகளைத் தடுக்கவும், வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கவும் கணினிமயமாக்கப்பட்டது. அதை மேலும் நவீனமாக்கும் வகையில் தற்போது ரூ. 4.5 லட்சம் செலவில் "ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையின் தொடக்க விழா ஆணையர் கா. பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன், சேவையைத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலேயே திருநெல்வேலி மாநகராட்சியில்தான் இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.

வாகன காப்பகத்தை மாதம் முழுவதும் பயன்படுத்த விரும்புவோருக்கு, சிவப்பு ஸ்மார்ட் கார்டும், ஒரு நாள் பயன்படுத்துவோருக்கு மஞ்சள் ஸ்மார்ட் கார்டும் வழங்கப்படுகின்றன. மாதாந்திர அட்டைக்கு இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 90 வாகன காப்பக கட்டணமாகவும், அட்டைக்குரிய வைப்புத் தொகையாக (திரும்பப் பெறக் கூடியது) ரூ. 50 என மொத்தம் ரூ. 140 வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் பயன்பாட்டுக்கு 24 மணி நேர கட்டணமாக ரூ. 3 வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ. 5-ம், காருக்கு ரூ. 10-ம் வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் 30 நாள்களுக்கு சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் ஜெய் சேவியர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி ஆணையர் (பொறுப்பு) து. கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர், மேயர், ஆணையர் உள்ளிட்டோர் வாகன காப்பகத்தை ஆய்வு செய்தனர்.