Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தூத்துக்குடி மாநகராட்சி நிலத்தை ரயில்வேக்கு வழங்க முடிவு அவசர கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன் 21.10.2010

தூத்துக்குடி மாநகராட்சி நிலத்தை ரயில்வேக்கு வழங்க முடிவு அவசர கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான 3.24 ஏக்கர் நிலத்தை ரயில்வேக்கு கொடுத்து, 3.92 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்வது என மாநகராட்சி அவரச கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. துணை மேயர் தொம்மைஏசுவடியான், கமிஷனர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்க துவங்கியதும், ‘ரயில்வேக்கு மாநகராட்சி நிலம் என்ன அடிப்படையில் கொடுக்கப்படுகிறதுஎன கவுன்சிலர் அன்புலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மேயர் கஸ்தூரிதங்கம் தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் ரயில்வேக்கு வழங்கப்படுகிறது. அதற்கு இணையாக ஆண்டாள் தெருவில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான 3923.5 சதுர மீட்டர் அளவிலான நிலம் பெறப்படுகிறது என்றார்.

தூத்துக்குடி புதிய மாநகராட்சி கட்டிடத்திற்கு அண்ணா நூற்றாண்டு விழா கட்டிடம் என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அஜெண்டாவில் பதிவு செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கவுன்சிலர் வீரபாகு மாநகராட்சியில் எந்த பயன்பாட்டின் போது அண்ணா நூற்றாண்டு கட்டிடம் என குறிப்பிடப்படவில்லை. அதனை குறிப்பிட்டு பயன்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து திமுக கவுன்சிலர் மாடசாமி தூத்துக்குடி மையவாடியில் இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லை என்பதை பலமுறை சுட்டிக்காட்டிவிட்டேன். இது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கூட்டம் நிறைவடைந்ததாக மேயர் அறிவித்தார்.

Last Updated on Thursday, 21 October 2010 09:17
 

பார்க்கிங் இல்லாத ஹோட்டல், வணிக வளாகம்

Print PDF

தினமலர் 21.10.2010

பார்க்கிங் இல்லாத ஹோட்டல், வணிக வளாகம்

திருச்சி: சென்னைக்கு அடுத்தபடியாக தொழில்துறை, கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்று பார்த்தால் திருச்சி தான் முதலிடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட திருச்சியில் சென்னையை விட அதிகமாக போக்குவரத்து நெரிசல், மக்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.அதற்கு மாநகரின் முக்கிய இடங்களில் உள்ள பெரிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் பலவற்றுக்கு தனியாக பார்க்கிங் இடம் இல்லாததும், பொது இடங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதும் தான் காரணம். பார்க்கிங் இடம் இல்லை என்பதால் முக்கிய சாலைகளை ஹோட்டல்களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்து விடுகின்றன.அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கால் இதைப்பற்றி கண்டு கொள்ள வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் பாராமுகமாய் உள்ளனர்.திருச்சி மாநகரில் நெரிசல் மிகுந்த இடங்கள் என்று பார்த்தால் மத்திய பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், என்.எஸ்.பி., ரோடு (பெரிய கடைவீதி), சிங்காரத்தோப்பு, ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட், பாலக்கரை ஆகிய பகுதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட பகுதிகளில் தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் புழக்கம் இருக்கும். ஆனால், இந்த இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும், தனியார் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் படும் அவஸ்தையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.மத்திய பஸ்ஸ்டாண்டை பொறுத்தவரை பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள பல ஹோட்டல்களுக்கு முறையான பார்க்கிங் வசதி கிடையாது. அப்படியிருந்தும் அவர்கள் ஹோட்டல் நடத்துகின்றனர்.பார்க்கிங் இல்லாத ஹோட்டல் நிர்வாகத்தினர் முக்கிய சாலைகளில் தங்களின் ஹோட்டலுக்கு வரும் கார்களை, போக்குவரத்து போலீஸாரை சரிகட்டி, நிறுத்த வைக்கின்றனர். பஸ்ஸ்டாண்ட் பகுதியில் தி.மு.., .தி.மு.., கம்யூனிஸ்ட் என்று அனைத்து கட்சி ஆதரவு பெற்றவர்களும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். அவர்களின் அரசியல் செல்வாக்கினால், போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.ஹோட்டல்களால் போக்குவரத்து நெரிசல் என்றால், பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ் அலுவலகங்களினாலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேபோல், பெரியகடை வீதியில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பல பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்பட்டுகின்றன. அவர்களையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததற்கு மாமூலான காரணமே கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முழுக்க, முழுக்க போக்குவரத்து போலீஸாரே காரணம்.சிங்காரத்தோப்பில் உள்ள சில வணிக வளாகங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் பார்க்கிங் இடம் என்பதே முக்கிய சாலைகள் தான். பாலக்கரையில் பஸ்கள் செல்லும் பாதையை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து இடையூறாக உள்ளனர்.காந்தி மார்க்கெட் பகுதியும் நடைபாதை வியாபாரிகளாலும், மளிகைக்கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு தினமும் போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடக்கக்கூட சிரமப்படும் நிலையும் ஏற்படுகிறது.இப்படியாக சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் திருச்சி நகர முக்கிய சாலைகள் அரசியல் செல்வாக்குள்ள ஹோட்டல், வணிக வளாகங்கள், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது.திருச்சி மாநகர வளர்ச்சிக்கு தடையாக உள்ள பார்க்கிங் இல்லாத ஹோட்டல் மீதும், வணிக வளாகம் மீதும் மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

 

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிம கட்டண தீர்மானம் ஒத்திவைப்பு

Print PDF

தினமணி 20.10.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு உரிம கட்டண தீர்மானம் ஒத்திவைப்பு

கோவை, அக்.19: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கக் கட்டணம் நிர்ணயிக்கும் தீர்மானம் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் அ.நந்தகுமார் தலைமை வகித்தார். உதவி ஆணையர் (வருவாய்) சுந்தரராஜன் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் வரி விதிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடந்தது.

மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணி, காவல் பணி மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் காவலர்களை நியமிக்க ரூ. 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மாநகராட்சி எல்லையில் உள்ள 3 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தினசரி ரூ. 40 பெற்று உரிமம் வழங்க ஒப்புதல் கோரிய தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் நடைபெறும் வகையிலான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்த பின்னர், உரிம கட்டணம் குறித்து விவாதிக்கலாம் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பூ மார்க்கெட் கடை ஏலம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய கடைகளின் பயனாளிகள் பெயர் மாற்றம் செய்தல், மாநகராட்சி மேற்கு மண்டல வணிக வளாக கடைகளை ஏலதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் ஆகிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நிதிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேந்திர பிரபு, ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 337 of 506