Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவை மாவட்டத்தில் அதிகரிக்கும் "விதிமீறல்கள்'

Print PDF

தினமலர் 17.10.2010

கோவை மாவட்டத்தில் அதிகரிக்கும் "விதிமீறல்கள்'

கட்டடம், விளம்பரம் மற்றும் தியேட்டர் கட்டணம் உட்பட பல்வேறு விவகாரங்களில் விதிமீறல் அப்பட்டமாக நடந்து வருவதால், கோவை மாவட்டம் "விதிமீறல் மாவட்டம்' என்று பெயர் பெற்று வருகிறது.அரசு காப்பீட்டுத் திட்டம், தொழிற்கடன், மகளிர் குழுக்களின் வளர்ச்சி உட்பட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மட்டுமின்றி, தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என பல விஷயங்களிலும், கோவை மாவட்டம், தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட இந்தப் பெயருக்கு சமீபகாலமாக இழுக்கு ஏற்படத் துவங்கியுள்ளது.ஏனெனில், அரசின் விதிகளை மீறுவதிலும் முன்னோடி மாவட்டமாக கோவை பெயர் பெற்று வருகிறது. இந்த விதிமீறல்களில் முதலிடத்தில் இருப்பது, கட்டட விதிமீறல்கள்தான். குறிப்பாக, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உட்பட்ட கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் கட்டட விதிமீறல்களுக்கு அளவேயில்லை.

40 அடி அகலம் அணுகுசாலை இல்லாத ரோடுகளிலும் பல அடுக்கு மாடிகள் கட்டுவது, வணிக நிறுவனங்களில் "பார்க்கிங்' இடம் ஒதுக்காமல் கட்டுவது, "பார்க்கிங்' இடமாகக் காண்பித்ததை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவது என வெவ்வேறு வடிவங்களில் விதிமீறல்கள் நடக்கின்றன. எந்த அனுமதியுமே வாங்காமல் கட்டப்படும் கட்டடங்களும் ஏராளம். இதன் மூலமாக, அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணம் அரசுக்குக் கிடைக்காமல், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. லே-அவுட் அநியாயம்: அதேபோல, நில உபயோக மாற்றம் செய்யாமல், அங்கீகாரமற்ற லே-அவுட்கள் அமைப்பதும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இவற்றைத் தடுக்க வேண்டிய பொறுப்பும், உள்ளூர் திட்டக்குழுமத்துக்கே உள்ளது. மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்ட இந்த குழுமம்தான், இப்போது செயலற்றுக் கிடக்கிறது.

இதற்கு முன்பிருந்த கலெக்டர்கள், இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். நகர ஊரமைப்பு விதிகளின் படி, அனுமதியற்ற கட்டடத்துக்கு "சீல்' வைப்பது, அங்கீகாரமற்ற லே-அவுட் முன்பாக அறிவிப்புப் பலகை வைப்பது என பல விஷயங்களை பிற மாவட்ட நிர்வாகங்களுக்கு தெளிவு படுத்தியதே கோவை மாவட்டம்தான்.விளம்பர வியாபாரம்: சென்னையில் விளம்பரப் பலகைகளை அகற்ற முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்ததும், சுப்ரீம் கோர்ட்டில் அதற்காக சிறப்பு உத்தரவு பெறப்பட்டது. ஆனால், சென்னையை விட, கோவையில்தான் அந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. முந்தைய கலெக்டர் பழனிக்குமாரின் அதிரடியால், மாவட்டத்தில் விளம்பரப் பலகைகளின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

அதற்கு நேர் மாறாக, தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது, விளம்பரப் பலகைகளின் ஆதிக்கம் கொடி கட்டிப்பறக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், பூங்காக்கள் என எல்லா இடங்களிலும் விளம்பரப் பலகை வியாபாரம் கனஜோராக நடக்கிறது.சுப்ரீம் கோர்ட் உத்தரவை துச்சமாக மதித்து, வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில், கோவை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு, "ஸ்பான்சர்' என்ற பெயரில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட, மாநகராட்சிகளின் முக்கிய அதிகாரிகளுக்கு "முக்கிய பங்கு' இருக்கிறது.

தியேட்டர் திகுதிகு: அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதைத் தடுத்து, அந்த தியேட்டரின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரமும் கலெக்டருக்கே உள்ளது. சமீபகாலமாக, கோவை தியேட்டர்களில் "கவுன்டர்'களிலேயே பகிரங்கமாக 5 மடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்ற கொடுமை நடந்தது. ஆனால், ஒரு தியேட்டரின் மீது கூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.அரசு அனுமதியின்றி பஸ் கட்டணத்தை உயர்த்துவது, வருவாய்த்துறை அனுமதியின்றி மரங்களை வெட்டுவது, நீர் நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிப்பது என பல விதிமீறல்கள் நடந்தாலும் அவற்றையும் மாவட்ட நிர்வாகம் சுத்தமாகக் கண்டுகொள்ளவேயில்லை. அரிசிக் கடத்தல், மணல் கடத்தல், வருவாய்த்துறை அலுவலகங்களில் புரோக்கர்கள் ஆதிக்கம் என கலெக்டர் களமிறங்க பல காரணங்கள் உள்ளன.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அத்துமீறல்களுக்கு எதிராக அதிரடியில் இறங்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள், ஒன்றுக்கும் உதவாத காரணங்களைக் கூறி, விதிமீறல்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தால், அதன் பலனை அடுத்த தேர்தலில் அரசுதான் அறுவடை செய்ய வேண்டும்.

-நமது நிருபர்-

Last Updated on Monday, 18 October 2010 06:04
 

சாலையில் சுற்றித்திரிந்த 32 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு அபராதம்

Print PDF

தினமணி 15.10.2010

சாலையில் சுற்றித்திரிந்த 32 மாடுகள் பிடிபட்டன: உரிமையாளர்களுக்கு அபராதம்

குடியாத்தம், அக். 14: குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 32 பசு மாடுகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பிடித்தனர்.

பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சி.ஆறுமுகம் தலைமையிலான ஊழியர்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த 32 பசுமாடுகளை பிடித்து வந்து அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.

மாடுகளின் உரிமையாளர்கள் தலா ரூ 500 அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை பிடித்துச் செல்லலாம். இல்லாவிட்டால் மாடுகள் பராமரிப்புக்காக நாள் ஒன்றுக்கு ரூ 100 கூடுதலாக வசூலிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் பிடித்துச் செல்லாவிட்டால் 10 நாள்கள் கழித்து பொது ஏலம் விடப்படும் என ஆணையர் ஆர். சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 15.10.2010

மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

மானாமதுரை, அக். 14: மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சம்பத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். முன்னதாக அலுவலகத்துக்கு வந்த ஆட்சியரை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது ஆகியோர் வரவேற்றனர். இதன்பின் ஆட்சியர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அலுவலகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த சுகாதார பணி வாகனங்களை ஆய்வு செய்தார்.

நகரில் வைகையாற்றுக்குள் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு ஆட்சியரிடம் பேரூராட்சித் தலைவரும், துணைத் தலைவரும் வலியுறுத்தினர். இதன்பின் வைகையாற்றுக்குச் சென்ற ஆட்சியர் அங்கு ஆற்றுக்குள் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்துதர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தில் மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு பேரூராட்சி அலுவலர்களிடம் விவரம் கேட்டார். அப்போது தலைவர் ராஜாமணி, துணைத் தலைவர் ஜோசப்ராஜன், கவுன்சிலர் சோமன், பஸ் நிலைய சீரமைப்புப் பணி ஒப்பந்ததாரர் பொறியாளர் காவேரி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 340 of 506