Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சாக்கடை திட்ட பணிகள் பாதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினகரன் 05.10.2010

சாக்கடை திட்ட பணிகள் பாதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

கோவை, அக் 5: கோவை மாநகராட்சியில் மழையின் காரணமாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவை மாநகராட்சியில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது. நகரின் பெரும்பாலான வார்டுகளில் சாக்கடை குழாய் பதித்தல், கழிவு நீர் சேகரிப்பு தொட்டி (சேம்பர்) கட்டுதல் உள்ளிட்ட பணி நடக்கிறது. இதுவரை 40 சதவீத பகுதிகளில் குழாய், தொட்டி கட்டும் பணி முடிந்து விட்டது.

கோவையில் பெய்து வரும் மழையின் காரணமாக பல பகுதியில் பணி முடங்கியது. ரோட்டில் மண், ஜல்லி, கற்களை குவிப்பதால் போக்குவரத்து இடையூறு இருப்பதாக புகார் அதிகரித்துள்ளது. சிங்காநல்லூர், பீளமேடு, உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் சாக்கடை திட்ட பணியால் குடியிருப்புகளுக்கு செல்ல முடியவில்லை.

இதைதொடர்ந்து கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நகர் மேம்பாட்டு திட்ட மேற்பார்வை பொறியாளர் பூபதி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புகார் பெறப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. சாக்கடை குழாய் பதித்த பகுதியில் ரோட்டோரங்களில் களி மண் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இந்த மண், மழையால் சகதியாக மாறி விட்டது. ரோட்டோரங்களில் மண் குவியலை அப்புறப்படுத்தவேண்டும்.

சேம்பர் அமைத்த பகுதியில் மண், கழிவு குவியல்களை அகற்றவேண்டும் என உத்தரவிடப்பட்டது. மழை நீடித்தால், கோவை நகரில் சாக்கடை திட்ட பணிகள் தடைபடும் நிலையுள்ளது. எனவே, குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கழிவு நீர் சேம்பர் கட்டுமானங்கள் காய்வதற்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. மழையின் காரணமாக சேம்பர் ஈரப்பதமாக இருப்பதாகவும், சில இடங்களில் வாகனங்கள் செல்வதால் உடையும் நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

குப்பை கொட்டுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர்மன்றம் முடிவு

Print PDF

தினமணி 04.10.2010

குப்பை கொட்டுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர்மன்றம் முடிவு

அரக்கோணம், அக். 3: அரக்கோணம் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணம் நகரமன்றத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரமன்ற தலைவர் விஜயராணி கன்னைய்யன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், "சில்வர்பேட்டையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் 2005 முதல் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதி மக்களால் இரண்டு நாட்களாக குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே நகரத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.

இதனால், நகரில் சுகாதார சீர்கேடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் நகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்போர் மீது மாவட்ட ஆட்சியர், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்து, உடனடி நடவடிக்கை கடும் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

பஸ் ஸ்டாண்டிலுள்ள 3 கடைகளை மூட உத்தரவு

Print PDF

தினமலர் 04.10.2010

பஸ் ஸ்டாண்டிலுள்ள 3 கடைகளை மூட உத்தரவு

சிவகாசி: சிவகாசி இந்திராநகர் குடியிருப்போர் நல சங்கத்தலைவராக இருப்பவர் மாரிமுத்து.இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தரைக் கடை நடத்த ஏலம் எடுத்தவர்கள் விதிகளுக்கு புறம்பாக கட்டடங்களை கட்டி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், கடைகளை அகற்ற வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, நாகமுத்து ஒரு நபர் கமிஷன் நியமித்து விசாரிக்க உத்தரவிட்டனர். ஒரு நபர் கமிஷன் கடந்த வாரம் கடைகளை ஆய்வு செய்து ஐகோர்ட் கிளைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் தரை கடை நடத்த அனுமதி பெற்ற சர்மிளா,பாண்டியராஜ்,பர்வீன் சுல்தான் ஆகியோரின் கடைகளை 4 வாரங்களுக்கு மூடுவதற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டன.

 


Page 345 of 506