Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட17 மின் மோட்டார்கள் பறிமுதல்:நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன் 17.09.2010

குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட17 மின் மோட்டார்கள் பறிமுதல்:நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி வீட்டுக் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 17 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சிப் பகுதியின் 4 மண்டலங்களிலும் பல வீடுகளில் குடிநீரில் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டலப் பகுதி குலவணிகர்புரம், மாசிலாமணிநகர், ராஜா நகர், அக்பர் தெரு, சாயன் தரகன் தெரு, ஞானியரப்பா பெரிய தெரு, சிறிய தெரு மற்றும் 35வது வார்டு அனைத்து தெருக்களிலும் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 17 மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மோட்டார் பொருத்திய குடிநீர் இணைப்புக்கள் உடனடியாக துண்டிக்கப்பட்டன.

கமிஷனர் எச்சரிக்கை:குடிநீர் இணைப்புதாரர்கள் சட்ட விரோதமான மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவேண்டும். இதுபோன்ற மோட்டார் பொருத்தி சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சினால் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு செய்யப்படும். சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தியது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சுப்பையன் எச்சரித்துள்ளார்.

 

நடை மேம்பால கட்டுமான பணிக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ., அலுவலகம்

Print PDF

தினமலர் 16.09.2010

நடை மேம்பால கட்டுமான பணிக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ., அலுவலகம்

சேலம்: சேலத்தில் முக்கிய சந்திப்பு இடங்களில், மக்கள் பயன்பாட்டிற்காக நடை மேம்பாலம் கட்டும் பணிக்கு அனுமதி தராமல் வட்டார போக்குவரத்து அலுவலகம்(ஆர்.டி.ஓ.,) இழுத்தடித்து வருகிறது. சேலம் மாநகரின் நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் பெருக்கத்தினால் மக்கள் சாலைகளை கடந்து செல்வது என்பது சிரமமான ஒன்றாக மாறியுள்ளது. சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி, கோரிமேடு, ஏற்காடு, கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.அரசு, தனியார் கல்லூரிகள், விருந்தினர் மாளிகை, கலெக்டர் மற்றும் போலீஸ்துறையின் உயரதிகாரிகளின் பங்களாக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் வீடுகள் உள்ளதால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம். மேலும், ஜங்ஷன், ஐந்து ரோடு, டி.வி.எஸ்., சத்திரம், ராமகிருஷ்ணா ரோடு மற்றும் செரி ரோடு, அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், நான்கு ரோடு சிக்னல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன.

இப்பகுதியில் ரோட்டினை கடந்து செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.தமிழகத்தின் பெரு நகரங்களில் முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மக்கள் சாலையை கடந்து செல்ல நடை பாதை மேம்பாலங்கள், சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் அதுபோன்ற நடைபாதை மேம்பாலங்கள், ரயில் பாதையை கடக்க சில இடங்களில் மட்டுமே உள்ளது.மக்களுக்கு பயன்படும் வகையில் மாநகரில் உள்ள நெடுஞ்சாலையில், மக்கள் அதிக அளவில் கடக்கும் இடங்களான புதிய பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு மற்றும் சாரதா கல்லூரி முன்புறம் ஆகிய மூன்று இடங்களில் நடைபாதை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம் பாலங்கள் விளம்பரங்கள் முலம் கட்ட சென்னையை சேர்ந்த விளம்பர கம்பெனியிடம் விடப்பட்டுள்ளது.இதற்காக மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, வட்டார போக்குவரத்து துறைகளிடம், தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மூன்று மாதங்களுக்கு முன்பாக, தங்கள் துறையின் மூலம் மாநகராட்சிக்கு தடையில்லா சான்று வழங்கி விட்டது. ஆனால், வட்டார போக்குவரத்து துறை இன்னும் அனுமதி வழங்காததால், பணிகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி கூறியதாவது:முக்கிய இடங்களில் மக்கள் சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம் பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையிடம் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தோம். நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து தடையில்லா சான்று வந்து விட்டது. வட்டார போக்குவரத்து துறையிடமிருந்து இன்னும் வரவில்லை. இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். சென்னையை சேர்ந்த தி இம்பிரஷன் அவுட்டோர் ஏஜன்ஸி எனும் விளம்பர நிறுவனம் மூலம் பணிகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

தரமற்ற சாக்கடை கால்வாயை இடிக்க உத்தரவு

Print PDF

தினமலர் 16.09.2010

தரமற்ற சாக்கடை கால்வாயை இடிக்க உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் தரமில்லாமல் சாக்கடை கால்வாய் கட்டப் பட்டது. அப்பணியை ஆய்வு செய்த துணை மேயர், கால்வாயை இடித்துவிட்டு மீண்டும் தரமாக கட்டுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். திருப்பூர் மாநகராட்சி பகுதி யில், தமிழக அரசு ஒதுக்கிய 40 கோடி ரூபாய் சிறப்பு நிதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி, பல பகுதிகளில் தரமில்லாமல் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதுடன், கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகளையும், புகார்களையும் ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மாமன்ற கூட்டத்திலும் இப்பிரச்னை வெடித்தது. சாக்கடை கால்வாய் பணி தாமத மாக நடப்பதை சுட்டிக்காட்டி, இந்திய கம்யூ., கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்நிலையில், துணை மேயர் செந்தில்குமார், 50வது வார்டு பகுதியில் நடந்து வரும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை நேற்று ஆய்வு செய்தார். கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் பகுதியில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயை பார்வையிட்ட போது, அப்பணி தரமில்லாமல் இருந்தது தெரிய வந்தது. கால்வாயை இடித்து விட்டு, மீண்டும் தரமாக கட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.

துணை மேயர் செந்தில்குமார் கூறியதாவது: சாக்கடை கால்வாய் கட்டும் போது, "வைபரேட்டர்' என்ற இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போது, மண், கற்கள், சிமென்ட் கலவை இறுக்கமாக பிடித்து, உறுதியான முறையில் கால்வாய் அமையும்; சந்து, பொந்து இல்லாமல், கால் வாய் சிறப்பாக இருக்கும். அந்த இயந்திரத்தை பயன்படுத்தா விட்டால், இக்கலவை உறுதி யாக நிற்காமல் பெயர்ந்து விடும். கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் பகுதியில், கட்டிய கால்வாயை பார்வையிட்ட போது, 15 அடி தூரத்துக்கு மூன்றடி வீதம் மூன்று இடங்களில் "வைப ரேட்டர்' இயந்திரத்தை பயன் படுத்தாமல் கால்வாயை கட்டியிருப்பது தெரிந்தது; அந்த இயந்திரம் பழுதானதால் பயன்படுத்தவில்லை என்று கூறினர். எனவே, கட்டிய வரை இடித்துவிட்டு "வைபரேட்டர்' இயந்திரத்தை பயன்படுத்தி, தரமான முறையில் புதிதாக கால்வாய் கட்ட அறிவுறுத்தப் பட்டது, என்றார்.

 


Page 358 of 506