Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு, அபராதம்

Print PDF

தினமலர் 16.09.2010

மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு, அபராதம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீரை திருடினால் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதமும் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாநகர் பகுதியில் 37 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. தற்போது வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்படும் குடிநீர், விநியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளியை குறைப்பதற்காக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் தேவைக்கு போக அதிகமான குடிநீரை அடைக்காமல் வடிகால்களில் விடுவதும், கால்நடைகளை குளிப்பாட்டுவதும், தோட்டத்திற்கு பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர சட்டவிரோதமாக மின்மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யும் நாட்களின் இடைவெளியை குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்த உடன் குழாயை அடைத்து வைக்க வேண்டும். மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் தாங்களே முன்வந்து மோட்டார்களை அகற்றிவிட வேண்டும். அதிகாரிகளின் திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால், மின்மோட்டார் பறிமுதல் செய்வதுடன் சம்மந்தப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் அடுத்த குடிநீர் இணைப்பு குறைந்தது 6 மாத காலத்திற்கு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 

வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ஆலோசனை

Print PDF

தினமணி 15.09.2010

வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ஆலோசனை

மதுரை,செப்.14: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பருவமழை மற்றும் புயல் அபாயத்தின்போது மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

வைகைக் கரையோரப் பகுதிகள், மாடக்குளம் மற்றும் செல்லூர் பகுதிகளில் மழை காரணமாக தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த டீசல் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தாற்காலிகமாகத் தங்கும் மையங்களை அமைப்பது, மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், சாலைகளில் மரம் விழுந்தால் உடனுக்குடன் அகற்றத் தேவையான ஏற்பாடுகள் செய்தல்,ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், குடிநீரில் குளோரின் அளவைப் பரிசோதனை செய்தல்,அனைத்து வாகனங்களையும் பழுதில்லாமல் வைத்திருத்தல், வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மாநகராட்சிப் பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்தல்,உணவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது, கண்மாய், குளங்களில் தேங்கும் நீரை அருகிலுள்ள அணைக்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை ஆணையர் க. தர்ப்பகராஜ், மண்டலத் தலைவர்கள் க. இசக்கிமுத்து, வி.கே. குருசாமி, காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆர்வலர் இளங்கோ, மீனாட்சி மகளிர் கல்லூரி புவியியல் பேராசிரியை சேது ராக்காயி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

வாய்க்கால் பாலம்: மராமத்து செய்ய மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 15.09.2010

வாய்க்கால் பாலம்: மராமத்து செய்ய மேயர் உத்தரவு

மதுரை,செப்.14: சேதமடைந்த அனுப்பானடி வாய்க்கால் பாலத்தை பார்வையிட்ட மேயர் தேன்மொழி அதனை மராமத்து செய்ய ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 6-வது வார்டு பகுதியில் மேயர் தேன்மொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள அனுப்பானடி பாலத்தை அவர் பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். சேதமடைந்திருந்த பாலத்தில், உடனடியாக மராமத்துப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கு மேயர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அப்பகுதியில் அரசு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண்மருத்துவ முகாமை அவர் தொடக்கி வைத்தார்.

பின்னர் கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் செல்லம், செந்தில்குமார், ஹீராஜான், நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் யு. அங்கையர்க்கண்ணி,கல்வி அலுவலர் வைத்திலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன், நிர்வாகப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


Page 359 of 506