Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திறந்த வெளி நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது

Print PDF

தினமலர் 09.09.2010

திறந்த வெளி நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது

சென்னை : தனியார் நிறுவனத்தின் உபயோகத்தில் இருந்து, 23 கிரவுண்டு நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தனியார் உபயோகத்தில் உள்ள, மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்த வெளி நிலங்களை மாநகராட்சி கையகப்படுத்தி பூங்காக்கள், விளையாட்டு திடல்களை அமைக்கிறது. அதுபோல் மேயர் சுப்ரமணியன் வார்டான 140 கிண்டி ஜவர்கர்லால் நேரு சாலையில், ஒலிம்பியா டெக்னாலஜி பார்க் கட்டடத்தின் திறந்தவெளி இடமாக, மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15.32 கிரவுண்டு நிலத்தில் பூங்கா அமைத்து பராமரித்து வந்தனர்.

அந்த இடத்தை கையகப்படுத்த மாநகராட்சி முறைப்படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. நேற்று மேயர் முன்னிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளிநிலத்தை அளந்து 15.32 கிரவுண்டு நிலத்தை கையகப்படுத்தி, "மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்புப் பலகை நடப்பட்டது. அதுபோல் அதே பகுதியில் தாமரை டெக் பார்க் கட்டடத்தில் ஒதுக்கப்பட்டிருந்த 7.57 கிரவுண்டு திறந்தவெளி நிலத்தையும் மாநகராட்சி கையகப்படுத்தி அறிவிப்புப் பலகை வைத்தது.

இது குறித்து மேயர் கூறியதாவது: கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் ஏறத்தாழ மூன்றாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Thursday, 09 September 2010 11:52
 

திருச்சி கலெக்டர் எச்சரிக்கை : போலி ஆவணம் மூலம் மனை விற்போர் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர் 09.09.2010

திருச்சி கலெக்டர் எச்சரிக்கை : போலி ஆவணம் மூலம் மனை விற்போர் மீது கடும் நடவடிக்கை

திருச்சி: "திருச்சி மாவட்டத்தில், வீட்டுமனைகளை போலி ஆவணத்தை காட்டியும், அரசு நிலத்தையும் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கலெக்டர் சவுண்டை யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரைச் சுற்றியுள்ள விமான நிலையம், திருவளர்ச்சிப்பட்டி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, எல்லக்குடி, திருவெறும்பூர், கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, வயலூர், சமயபுரம், கண்ணனூர், மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை மனைகளாக பிரித்து பல தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

அவ்வாறு விற்பனை செய்யும் போது, அரசின் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு என போலியான ஆவணத்தைக் காட்டி விற்பனை செய்து வருகின்றனர். மனைப்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநகராட்சி கமிஷனர், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவற்றின் தலைவர் எவருக்கும் மனைகளை அங்கீகாரம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

அப்படி ஏதேனும் ஆவணம் காட்டப்பட்டால், அவை அனைத்தும் போலியானவை. எனவே, அந்த ஆவணத்தை நம்பி மனைப்பிரிவை வாங்குவோருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது. அவ்வாறு மனைப்பிரிவுகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம், அந்த நிலத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தையும் சேர்த்து விற்பனை செய்வதாக புகார் வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தால் அவற்றை விசாரணை செய்து அந்த நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் மனைப்பிரிவாக விற்பவர் மீதும், அவற்றை வாங்குபவர் மீதும் குணடர் தடுப்புச்சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே, நகர் பகுதிகளை ஒட்டி வீட்டு மனைப்பிரிவை பொதுமக்கள் வாங்கும் போது, உரிய கவனம் செலுத்தி வாங்க வேண்டும்.

 

புதிய மார்க்கெட்டில் தலை தூக்கும் பிரச்னைகள் நடைபாதை கடை வைத்தால் நடவடிக்கை

Print PDF

தினகரன் 09.09.2010

புதிய மார்க்கெட்டில் தலை தூக்கும் பிரச்னைகள் நடைபாதை கடை வைத்தால் நடவடிக்கை

மதுரை, செப். 9: புதிய சென்ட்ரல் மார்க்கெட் மக்கள் மத்தியிலும் வியாபாரிகளிடமும் நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள சில குறைபாடுகளை களைந்தால் மார்க்கெட் மாற்றம் முழு வெற்றி பெறும்.

மதுரை மீனாட்சி அம் மன் கோயில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க் கெட், மாட்டுத் தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு தடைகள் ஏற்பட்டபோதிலும் மத்திய அமைச்சர் மு..அழகிரி அதிரடி நடவடிக்கையால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள 524 கட்டிட கடைகளில் பலர் திறக்காமல் உள்ளனர். 1090 தரைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தயாரான கடைகள் மாத வாடகைக்கு ஒதுக்கும் வரை மாநகராட்சி நேரடியாக தின வாடகை வசூலித்து வருகிறது.

இதற்கு போட்டியாக தனி நபர்கள் மார்க்கெட்டின் மத்தியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர். அதில் நள்ளிரவு முதல் விடியும் வரை கடை அனுமதித்து ரூ. 50, ரூ. 100 என முறைகேடாக வசூலிக்கின்றனர்.

இன்னொரு கும்பல் நள்ளிரவில் நடைபாதையில் துண்டு போட்டு பணம் தரும் வியாபாரிகளுக்கு இடத்தை கொடுக்கின்றனர். இதனால் உண்மையான கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது.

தக்காளி, சீமைக்காய் வியாபாரிகளுக்கு 131 தரை கடைகளுக்கு இடம் வெட்ட வெளியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தளமோ, மேற் கூரையோ இல்லை. வெயிலில் தக்காளி வெம்புகிறது.

மழை பெய்தால் சகதியில் நிற்க முடியவில்லை என வியாபாரிகள் கூறினர். இங்கு லாரிகள் வந்து திரும்ப முடியாத அளவுக்கு ஒரு பாதை மட்டும் உள்ளது. முன் பகுதியில் யாரும் நுழைய முடியாதபடி கயிறு கட்டி வளைக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் நுழையும் கடைக்காரர்கள் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கு கட் டணம் வசூலிக்கப்படுகிறது. சைக்கிளுக்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கலாம். மார்கெட்டில் பயன்படுத்தப்படும் தராசு எடைக்கற்கள் போலியானவையாக உள்ளன.

இதை மாற்றி எலெக்ட்ரானிக் தராசு பயன்படுத்த கட்டாயப்படுத்தலாம். விலை நிர்ணயம் செய்வதிலும் குளறுபடி உள்ளது. இதை உழவர் சந்தை போல நிர்ணயித்து விற்றால் பொதுமக்கள் பயனடைய முடியும்.

கொடைக்கானல், ஊட்டி, ஓசூர் பகுதிகளில் இருந்து லாரிகளில் வரும் காரட், பீட்ரூட், உருளைகிழங்கு போன்ற காய்கறிகள் மொத்த வியாபாரம் நடக்கும் இடமான பரவையில் இறக்கப்படுகின்றன. இதை மாற்ற வேண்டும். வெங்காய மொத்த மார்க்கெட் கீழ மாரட் வீதியில் உள்ளன. இதுவும் மாட்டுத் தாவணிக்கு வர வேண்டும்.

மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து காய்கறி கொண்டு வரவும், சிறு வியாபாரிகள் வாங்கி செல்லவும் தேவையான பஸ் வசதி இல்லை. மதுரை நகர் முழுவதும் சிறு வியாபாரிகள், கூடைகளில் காய்கறி வாங்கிச் செல்ல நள்ளிரவு முதல் காலை வரை பஸ் வசதி இல்லை.

தலைச் சுமையுடன் செல்ல வேண்டியது இருப்பதால் மார்க்கெட் வாசலுக்கு பஸ் வசதி அவசியமாகிறது.

நள்ளிரவு முதல் விடியும் வரை அதிக வியாபாரம் என்பதால், பாதுகாப்புக்கு புறக் காவல் நிலையம் அமைய வேண்டும். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதின் மூலம் மார்க்கெட் முழு வெற்றிக்கு வழி வகுக்கும்.

மார்க்கெட்டை மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், துணை ஆணையாளர் தர்ப்பகராஜ், தலைமை பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஆணையாளர் கூறியதாவது:&

மார்க்கெட்டில் மாநகராட்சி அனுமதித்ததை தவிர நடைபாதை கடைகள் அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட கடைகள் முன்பாக விரித்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. இதன்படி நள்ளிரவு முதல் காலை வரை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி குழு கண்காணிக்கும். மீறி நடைபாதையில் கடை வைத்தால் அகற்றப்பட்டு, அந்த நபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

 


Page 361 of 506