Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கட்டட வரைவாளர்களுக்கு '16 கட்டளைகள்' இணையதளத்தில் விண்ணப்பிக்க இது அவசியம்

Print PDF

தினமலர்              02.01.2014

கட்டட வரைவாளர்களுக்கு '16 கட்டளைகள்' இணையதளத்தில் விண்ணப்பிக்க இது அவசியம் 

மதுரை:மதுரை மாநகராட்சியில், வெப்சைட் மூலம் வரைபட அனுமதி வழங்குவது தொடர்பாக, கட்டட வரைவாளர்களுக்கு, '16 கட்டளைகளை' நகரமைப்பு பிரிவு விதித்துள்ளது.

நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரைபட வரைவாளர்களுக்கு வழங்கிய 16 கட்டளைகள்:

  • மனை உரிமையாளர், கட்டடவிண்ணப்பங்களை, வெப்சைட் மூலம் பெற்ற ஆய்வறிக்கையை பெற்ற 15 நாட்களுக்குள், சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்துடன், வெப்சைட்டில் பெறப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் மாநகராட்சிக்கு செலுத்திய கட்டண ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு, முறைப்படுத்திய மனைப்பிரிவின் அனுமதி எண் குறிப்பிடப்பட வேண்டும்.
  • கட்டிட வரைபட நகல் 5 இருக்க வேண்டும்.
  • அரசிதழில் பதிவுபெற்ற அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் கட்டாயம்.
  • ரூ.20 ஸ்டாம்ப் பேப்பரில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.
  • மனையின் 4 திசையிலும் நின்று, அதன் உரிமையாளர் எடுத்த போட்டோ வேண்டும்.
  • மனை உரிமையாளரின் 2 'பாஸ்போர்ட் சைஸ்' போட்டோ அவசியம்
  • திட்டப் பகுதியில் அமையும் கட்டடங்களுக்கு, விதிகளின்படி, அதன் பரப்பளவு முன் திறவிடம், பக்க திறவிடம், பின்புற திறவிடத்தை வரைபடத்தில், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • முதல் தளத்திற்கு மட்டும் வரைபட அனுமதி கேட்போர், கட்டடத்தின் தரைதள வரைபட நகல் மற்றும் கட்டிய ஆண்டின் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • வரைபடத்தில், கட்டடம் அல்லது மனை உரிமையாளரின் பெயர், மற்றும் வெப்சைட்டில் பெற்ற எண்ணை குறிப்பிடவேண்டும்.
  • கட்டட வரைபடத்தில் ரோட்டின் அகலம், ரோட்டில் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
  • கட்டட வரைபடத்தின் உட்பிரிவு செய்யப்பட்டசர்வே வரைபடத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • மீனாட்சி அம்மன் கோயிலிருந்து 1கி.மீ., சுற்றளவிற்கு, 9மீட்டர் உயரம் வரை, தரை மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே வரைபடம் தயாரிக்க வேண்டும். தரைகீழ் தளத்திற்கு கண்டிப்பாக வரைபடம் சமர்ப்பிக்கக் கூடாது.
  • அனைத்து கட்டட வரைபடங்களிலும், குறைந்தபட்சம் முன்புற திறவிடம் மற்றும் பக்கதிறவிடத்தில் 5 அடி துாரம் இருக்க வேண்டும்.
  • வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுரஅடி, குடியிருப்பு கட்டடங்களுக்கு 4,000 சதுர அடிக்கு மட்டுமே, மாநகராட்சியின் திட்டஅனுமதி மற்றும் கட்டட அனுமதி கேட்கும் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்ற பிறகே, மாநகராட்சியின் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும், என தெரிவித்துள்ளனர்.
 

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Print PDF

தினமலர்              02.01.2014

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

கட்டட அனுமதி பணிகளை, விரைவுபடுத்தும் நோக்கில், மூத்த மற்றும் துணை திட்ட அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில், மாநகராட்சிக்கு அனுப்ப, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஒப்புதல் அளித்துள்ளது.

தனி துறை

நகரமைப்பு சட்டப்படி, மூன்று மாடிகள் வரையிலான, ஆறு வீடுகள் கொண்ட சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், நகரமைப்புத்துறை ஒன்று தனியாக இருந்தாலும், திட்ட அனுமதி வழங்கும் நடவடிக்கைகள், மண்டல அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்
படுகின்றன.

மாற்றம்


இந்த அலுவலகங்களில், நகரமைப்பு வல்லுநர்கள் இல்லாததால், கட்டட அனுமதி தொடர்பான பணிகள், தாமதம் ஆவதாக புகார் கூறப்படுகிறது.

எனவே, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போன்று, மாநகராட்சியிலும் நகரமைப்பு வல்லுநர்களை, திட்ட அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் நடந்த சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், இது குறித்து வலியுறுத்தினார்.

ஆனால், ஆரம்ப நிலையில், அதற்கு சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்த தீர்மானம், சில திருத்தங்களுடன் அந்த கூட்டத்தில் நிறைவேறியது. இந்த விஷயத்தில், சில முக்கிய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஒப்புதல்

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி ஆணையர் கோரியபடி, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில் மாநகராட்சிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி திட்ட அதிகாரிகள், திட்ட உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அவர்களை அனுப்ப இயலாது.

ஒப்புதல்

மூத்த திட்ட அதிகாரிகள் (சீனியர் பிளானர்), துணை திட்ட அதிகாரிகள் (டெபுடி பிளானர்) நிலையில் உள்ளவர்களை மட்டுமே, அயல்பணி அடிப்படையில் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு அயல்பணி என்ற அடிப்படையில், அனுப்பப் படும் அவர்களுக்கான ஊதிய விகிதங்களை, தங்களால் சமாளிக்க முடியுமா என்பது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் காலி இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய நிலவரம்

சி.எம்.டி.ஏ.,வில் தற்போதைய நிலவரப்படி, ஐந்து மூத்த திட்ட அதிகாரிகள், 23 துணை திட்ட அதிகாரிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர், தலைமை திட்ட அதிகாரிகளின் உதவியாளர்களாகவே உள்ளனர். திட்ட அனுமதியில், திட்ட அதிகாரிகள் அனுப்பும் கோப்பு களை, தலைமை திட்ட அதிகாரிக்கு, பரிந்துரைப்பதை தவிர, வேறு பணி இல்லாத சூழல் நிலவுகிறது.

 

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபங்களுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய சாதாரண கூட்டத்தில் 74 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் 8வது தீர்மானமாக மாநகராட்சி மண்டபத்திற்கு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான விசிடிவி ரோட்டில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் மற்றும் தமயந்திபாபுசேட் திருமண மண்டபம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த மண்டபங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு 19 ஆண்டுகள் ஆன நிலையில் நகரில் அமைந்துள்ள இதர திருமண மண்டபங்களுக்கு பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், மண்டபங்களின் பராமரிப்பு செலவு, காவலர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 2,500 ரூபாய் கட்டணத்தை 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 1,250 ரூபாய் கட்டணத்தை 6 ஆயிரத்து 250 ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 400 ரூபாயை 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமயநதிபாபுசேட் திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 10 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 1,500 ரூபாய் கட்டணத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 750 ரூபாய் கட்டணத்தை 4 ஆயிரம் ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 250 ரூபாயை 1,500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


Page 38 of 506