Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

Print PDF

தினகரன் 25.08.2010

நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

தேனி, ஆக. 25: தேனி மாவட்டத்தில் நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

அல்லிநகரம் நகராட்சியில் தேனி&பாபாஸ் சாலையில் சிட்கோ பின்புறம் 7.35 ஏக்கர் பரப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இடத்திற்கு வனத்துறை சார்பில் குத்தகை ஒப்பந்தம் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தின் வரைபடத்தை பார்வையிட்டார்.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக கருவேலநாயக்கன்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமையவிருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்பு விஸ்வநாததாஸ் காலனியில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்துவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

பின்பு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,``தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க தொழில்நுட்ப அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. ஒப்பந்த புள்ளி பணிகள் விரைவில் துவங்கும். நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.’’ என்றார்.

ஆய்வின்போது, நகராட்சிகளின் மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் அசோகன், நிர்வாக பொறியாளர் மருதுபாண்டியன், தேனி நகராட்சி தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் இலங்கேசுவரன், ஆணையாளர் மோனி, பொறியாளர் கணேசன், நகர அமைப்பு அலுவலர் ராமசாமி, நகர அமைப்பு ஆய்வாளர் புவனேஸ்வரன் உடனிருந்தனர். இதேபோல், சின்னமனூர், கம்பம் நகராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

 

பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 24.08.2010

பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 24: பொள்ளாச்சி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வித்திலும் பொது இடங்களில் பன்றிகள் வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகரின் பல இடங்களில் சாக்கடை கால்வாய்களை ஒட்டிய பகுதிகளிலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளிலும் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை சில இடங்களில் இரவு நேரங்களில் மட்டுமே வளர்ப்போரால் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களிலும் பன்றிகள் ஆங்காங்கு சுற்றித் திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சுகாதார பிரிவில் உள்ள துப்புரவு பணியாளர்களைக் கொண்டு நகரில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து நகருக்கு தொலைவில் கொண்டுபோய் விடப்பட்டது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருந்தது. அதில் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளை வளர்க்கக் கூடாது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு நகரில் பன்றிகள் வளர்ப்பது சற்றே குறைந்திருந்தது.

ஆனால், தற்போது மீண்டும் நகரின் பல இடங்களில் அதிலும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மரப்பேட்டை பள்ளம், நேரு காலனி, பெரியார் காலனி, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் பன்றிகளை அதன் உரிமையாளர்கள் பகல் நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரிய விட்டுவிடுகின்றனர்.

இவ்வாறு பொது இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, பன்றிகளை வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் வரதராஜ் கூறியதாவது:

நகரின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படும் விதத்திலும் பன்றிகள் அதிகளவில் வளர்ப்பதாக புகார்கள் வந்துள்ளன. ஆகவே, சுகாதார ஆய்வாளர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை சுகாதார பிரிவு பணியாளர்களைக் கொண்டு பிடித்து அப்புறப்படுத்தும் பணி விரைவில் துவங்கும். மேலும் பொது இடங்களில் சுற்றித்திரியும் வகையில் பன்றிகளை வளர்ப்போர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கைகளையும் எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு வரதராஜ் கூறினார்.

 

விருகம்பாக்கம் கால்வாய்: மேயர் ஆய்வு

Print PDF

தினமலர் 24.08.2010

விருகம்பாக்கம் கால்வாய்: மேயர் ஆய்வு

சென்னை:விருகம்பாக்கம் கால்வாய் சீரமைக்கும் பணியை மேயர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் நீர்வழித் தடங்கள் தூர் எடுத்து கரைகளை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதுபோல், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் 6.34 கி.மீ., நீளத்திற்கு 83 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடக்கிறது.இந்த பணியை மேயர் நேற்று காலை ஆய்வு செய்த போது கூறியதாவது:மழைக் காலத்தில் நகரில் வெள்ளப் பெருக்கை தவிர்க்க ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 1,447 கோடி ரூபாய் மதிப்பில் 12 நீர்பிடிப்பு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் வெள்ளப் பெருக்கை தவிர்க்க 2.34 கி.மீ., நீளத்திற்கு 25 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் கூவம் ஆற்றிற்கு இணை கால்வாய் அமைக்கப்படுகிறது.விருகம்பாக்கம் கால்வாயில் 6.34 கி.மீ., நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படும்.மதுரவாயல் ஏரியில் உபரி நீரை கூவம் ஆற்றிற்கு திருப்பி விடும் வகையில், 17 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் கால்வாய் சீரமைக்கப்படும்.இந்த பணிகள் முடிந்தால் அரும்பாக்கம், ஜெய் நகர், எம்.எம்.டி.., காலனி, சாய் நகர், சின்மயா நகர், அய்யப்பா நகர், சேமத்தம்மன் நகர், ஆசாத் நகர், திருவள்ளுவர்புரம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாத நிலை ஏற்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 371 of 506