Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை: போடி நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 28.06.2010

குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை: போடி நகராட்சி எச்சரிக்கை

போடி, ஜூன் 27: குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போடி நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போடியை பிளாஸ்டிக் குப்பைகளற்ற நகராக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது: போடி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றினால் உருவாகும் பொது சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம், தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நகராட்சி பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அதற்கான நிர்வாகச் செலவினை உரிய நபர்களிடம் வசூல் செய்யப்படும். இதன்படி மொத்த விற்பனை செய்பவர்களிடம் ரூ. 500, சில்லரை விற்பனை செய்பவர்களிடம் ரூ. 200, பயன்படுத்துவோரிடம் ரூ.100 நிர்வாகச் செலவினக் கட்டணமாக வசூல் செய்வதுடன் அந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்படும்.

இதேபோல, நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், மக்கும் குப்பைகளைச் சேகரிக்க குப்பை சேகரிப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு குப்பைகள் தனித்தனியே சேகரிக்கப்படுகின்றன.

பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது. மீறி குப்பைகளைக் கொட்டினால் குடியிருப்பு வீடுகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.100-ம், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.200-ம், சிறிய உணவு விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.500-ம் பெரியவற்றிற்கு ரூ.1000-ம் நிர்வாக செலவினக் கட்டணமாக வசூல் செய்யப்படும். நகரின் பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். மேலும் இதுகுறித்து ஆலோசனைகளை 30 தினங்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

 

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின்மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் அதிரடி

Print PDF

தினமணி 28.06.2010

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின்மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் அதிரடி

செய்யாறு, ஜூன்28: செய்யாறில் நகராட்சி ஆணையாளர் நடத்திய சோதனையில் வீடுகளில் குடிநீர் உறிஞ்ச குழாய் இணைப்புகளில் பொருத்தியிருந்த 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்யாறு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 3 ஆயிரத்து 700 குழாய் இணைப்புகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. இந்த குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் விடும் போது ஊறிஞ்சி எடுப்பதாகவும், அதனால் போதிய குடிநீர் கிடைப்பதில்லை எனவும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எம்.ராஜாவுக்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில் பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமன் தலைமையில் பிட்டர்கள் மோகன், பஞ்சாட்சரம் ஆகியோர் காமராஜர் நகர் பகுதியில் கடந்த 24ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 வீட்டின் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் ஊறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 3 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

 

புதிய பேருந்து நிலையம், வண்டிப்பேட்டை பகுதி கடைகளுக்கு உரிமக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க நகர்மன்றத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 28.06.2010

புதிய பேருந்து நிலையம், வண்டிப்பேட்டை பகுதி கடைகளுக்கு உரிமக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க நகர்மன்றத்தில் தீர்மானம்

தஞ்சாவூர், ஜூன் 27: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலும், வண்டிப்பேட்டையிலும் உள்ள- உரிமக் காலம் நிறைவடைந்த கடைகளுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு உரிமத்தைப் புதுப்பித்து வழங்க வகை செய்யும் தீர்மானம் நகர்மன்றத்தில் புதன்கிழமை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.

மேலும், அந்தக் கடைகளுக்கு 15 சதம் வாடகையை உயர்த்த வகை செய்யும் செய்யும் தீர்மானமும் ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் நகரில் உள்ள சிவகங்கை பூங்கா பொதுமக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. இங்கு நீச்சல் குளம், படகு சவாரி, ரயில் வண்டி சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் மான், மயில் உள்ளிட்ட பறவைகளும் பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன.

மான்களுக்கு தேவையான பசும்புல் தீவனங்களை ஓராண்டுக்கு தொடர்ந்து விநியோகிக்க நகராட்சி மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டத்தில், ரூ. 2.46 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கு இதற்கானப் பணிகளை ஒப்படைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பறவைகள் மற்றும் முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு தேவையான உணவுப் பொருள்களை ஓராண்டுக்கு வழங்க ரூ. 2.30 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்தவருக்கு, அதற்கான பணிகளை ஒப்படைப்பு செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானங்கள் புதன்கிழமை நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்தில் வைக்கப்படுகிறது.

Last Updated on Monday, 28 June 2010 06:54
 


Page 401 of 506