Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ75 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நகராட்சி அலுவலக கட்டிடம் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

Print PDF

தினகரன் 15.06.2010

ரூ75 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் நகராட்சி அலுவலக கட்டிடம் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

திருப்பூர், ஜூன் 15:15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு, ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அமைச் சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது.

15 வேலம்பாளையம் நகராட்சியானது, ஊராட்சியாக இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேரூராட்சியாக இருந்தபோது அலுவலகத்தில் எத்தனை ஊழியர்கள் இருந்தார்களோ? அதே அளவுக்கு தான் தற்போதும் உள்ளனர். அதே போல் நகராட்சி அலுவலகமும் எந்த வித வசதியும் இன்றி இருந்து வந்தது. இதனால் வரி கட்ட வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் நகர் மன்ற கூட்ட அரங்கமும் வசதி இல்லாமல் இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நகர்மன்ற கூட்டத்தில் சகல வசதியுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகத்தை சந்தைப்பேட்டை இருந்த இடத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் அதை தீர்மானமாக நிறைவேற்றி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுமதி கிடைத்ததும் கட்டிடம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்தது. இதன் பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது ரூ. 75 லட்சம் செலவு செய்யப்பட்டுள்தாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கலெக் டர் சமயமூர்த்தி ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நகராட்சித் தலைவர் எஸ்.பி.மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். இன்னும் ஓரிரு மாதத்திற்குள் புதிய அலுவலகம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

 

ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டு பற்றி இணைஇயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.06.2010

ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டு பற்றி இணைஇயக்குனர் ஆய்வு

ஈரோடு: ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டுகள் குறித்து சென்னை நகராட்சி இணை இயக்குனர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு நகராட்சி 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஈரோடு நகராட்சி, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, பெரியசேமூர், காசிபாளையம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சி, பி.பி., அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகள், திண்டல், வில்லரசம்பட்டி, கங்காபுரம், முத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகள் ஆகியவை ஒருங்கிணைந்த மாநகராட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த பகுதிகளை நான்கு மண்டலங்களாவும், 60 வார்டுகளாகவும் பிரிக்க அரசு உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒரு மண்டலத்துக்கு 15 வார்டுகள் வீதம் மொத்தம் 60 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டன. அரசு அனுமதிக்கு பட்டியல் சென்னை அனுப்பப்பட்டது. ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டுகள் பட்டியல் குறித்து சென்னை நகராட்சி இணை இயக்குனர் மகேஸ்வரி, ஈரோடு மாநகராட்சியில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். கமிஷனர் பாலச்சந்திரன் அறையில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது.

"காசிபாளையம் நகராட்சியில் பகுதியில் 48 சதுர கிலோ மீட்டர் தூரம் சேர்க்க வேண்டும்' என, அரசு உத்தரவு உள்ளது. ஆனால், அவ்வளவு பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இதனால், சரியான முறையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டறியப்பட்டது. ஆய்வில், கமிஷனர் பாலச்சந்திரன், காசிப்பாளையம், பெரியசேமூர் நகராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகராட்சியில் முதலாவது மற்றும் இரண்டாவது மண்டலங்களில் வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதி வார்டுகள் பிரித்தலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என நகராட்சி முன்னாள் தலைவர் லோகநாதன், இணை இயக்குனரிடம் மனு கொடுத்தார்.

மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி வார்டுகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். புதிதாக பிரிக்கப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது மண்டலங்களில் வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதி வார்டுகள் பிரித்தலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 6, 7, 10 வார்டுகள் மூன்றும் ஒரு வார்டாக பிரித்தல் சரியில்லை. 6, 7, 8 ஆகிய வார்டுகளை ஒன்று சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் கட்டிடம் கட்ட அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன் 14.06.2010

அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் கட்டிடம் கட்ட அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 14: அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று வருவாய்த்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி நிருபர்களிடம் அமைச்சர் ராஜ் குமார் சவுகான் கூறியதாவது:

டெல்லியில் இப்போது 1,639 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்கள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் மேலும் சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இப்படிப்பட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதற்கு அனுமதிக்கும் துணை கலெக்டர், போலீஸ் துணை கமிஷனர், வருவாய்த்துறை துணை ஆணையாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கள் பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை போலீசாரின் உதவியுடன் அகற்ற தேவையான நடவடிக்கையை துணை கலெக்டர் எடுக்க வேண்டும்.

அதேபோல இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நில புரோக்கர்கள், நில சொந்தக்காரர்கள், மற்றும் கட்டிட காண்டிராக்ரடர்கள் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், நில புரோக்கர்கள் மற்றும் சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான 136.5 ஏக்கர் நிலத்தை மீட்டு இருக்கிறோம். மேலும் சிலர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு வருவாய்த்துறை அமைச்சர் ராஜ் குமார் சவுகான் கூறினார்.

 


Page 406 of 506