Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சேலம் மாநகராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

Print PDF

தினமணி 09.06.2010

சேலம் மாநகராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

சேலம், ஜூன் 8: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் (படம்).

சேலம் அணைமேடு பகுதியில் ரூ.4.20 கோடியில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள், ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் ரூ.2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகள், வெள்ளக்குட்டை ஓடையில் இரண்டு பகுதிகளாக ரூ. 9.17 கோடியில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் அப்சரா பாலம் முதல் செவ்வாய்பேட்டை வரை ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் பணிகள், செவ்வாய்பேட்டை முதல் அன்னதானப்பட்டி பாலம் வரை ரூ.3.85 கோடியில் செய்யப்பட்டு வரும் பணிகள், அன்னதானப்பட்டி பாலம் முதல் கொண்டலாம்பட்டி அணைக்கட்டு வரை ரூ.2.56 கோடியில் நடைபெற்று வரும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் பழைய பஸ் நிலையம் அருகில் ரூ.1.56 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆட்கொல்லி பாலம், ரூ.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காண்பாயிண்ட் பாலம் என மொத்தம் ரூ.31.63 கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும். ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் திருமணி முத்தாறு கரையில் உள்ள அரசு நிலங்களை அளவீடு செய்து அடையாளக் கல் நட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) .கலைஅரசி, மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி, துணை மேயர் சி.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தனியார் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 09.06.2010

தனியார் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த மாநகராட்சி திட்டம்

சென்னை: நகரிலிருக்கும் தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நகரில் பல இடங்களில், தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளது.

இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இடத்திற்கு ஏற்றார் போல் கட்டணம் வசூல் செய்வது, அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்வது, அடிக்கடி வாகனம் காணாமல் போவது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துவது போன்ற புகார்கள், மாநகராட்சிக்கு வந்த வண்ணம் இருந்தது. தனியார் வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் காணாமல் போனால் கூட சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், நகரிலுள்ள தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்படும் என்று மேயர் சுப்ரமணியன் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சியின் வருவாய் துறையினர் ஆய்வு செய்ததில், நகரில் 180 இடங்களில் சிறிய, பெரிய தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்திலும், ஒரே சீரான கட்டணம் வசூல் செய்வது, வாகனங்களை பாதுகாப்பாக வைப்பது, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வாகன நிறுத்தம் செய்வது குறித்து மாநகராட்சி ஆலோசித்து, வரும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தனியார் வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

 

அனுமதி பெறாமல் வீட்டுமனை விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 07.06.2010

அனுமதி பெறாமல் வீட்டுமனை விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முறையான அனுமதிபெறாமல் சட்டவிரோதமாக வீட்டுமனைகள் விற்கப்படுகின்றன. மனைகள் விற்பனை செய்யும் முன் நகர்ப்புற ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதியுடன், சம்பந்தபட்ட பஞ்சாயத்து அனுமதியும் பெறவேண்டும்.

மேலும் மனைபிரிவு அமைக்கும் இடத்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீத இடத்தை பாதை நீங்கலாக பொதுக்காரியங்களுக்காக பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்கவேண் டும். இந்த அரசு உத்தரவை மீறி நிலத்தை விற்பனை செய்தவர்களுக்கு பஞ்சாயத்து மூலம் கட்டிட வரை பட அனுமதியும், குடிநீர் இணைப்பு மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரமுடியாது.

நகர்ப்புற ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதியும், ஊராட்சி நிர்வாக அனுமதியும் பெற்ற வீட்டுமனைகளில் பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்கள் மறுபடியும் மாற்றி மோசடியாக விற்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட விபரங்களை வீட்டுமனை விற்பவர்களிடம் பெற்று அவை சட்டப்படியானதா என்பதையும் உறுதிப்படுத்தி வீட்டுமனைகளை பதிவு செய்யவேண்டும்.

மனைகளை விற்கும் போது நகர்ப்புற ஊரமைப்புத்துறை மற்றும் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 411 of 506