Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 01.06.2010

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில், ஜூன்1: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகளை விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிறுவனங்களை சீல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து கலெக்டர் ராஜேந்திரரத்னூ உத்தரவின் பேரில் ஆர்டிஓ நடராஜன் தலைமையில் தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் திருவாழி, கிராம நிர்வாக அதிகாரி சுயம்பு ஆகியோர் அடங்கிய குழு கோர்ட் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மாலை ஆய்வு செய்தது. ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் என மொத்தம் 82.855 கிலோ இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த கடைக்கு ஆர்டிஓ நடராஜன் சீல் வைத்தார்.

இது குறித்து ஆர்டிஓ கூறியது:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இந்த ஸ்டோரில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றியுள்ளோம். மேலும் அந்த ஸ்டோருக்கு சீல் வைத்துள்ளோம். ஒரு வார காலத்தில் விளக்கம் அளிக்க அந்த ஸ்டோர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.

ஆய்வின் போது நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி, சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்த ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். வடசேரி இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைக்கு சீல்

Print PDF

தினமணி 01.06.2010

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைக்கு சீல்

நாகர்கோவில், மே 31: நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

நாகர்கோவில் நீதிமன்ற சாலையிலுள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவுக்கு தகவல் கிடைத்தது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் வட்டாட்சியர் ச. நாகராஜன், வருவாய் ஆய்வாளர் திருவாழி, கிராம நிர்வாக அலுவலர் சுயம்பு, வடசேரி இன்ஸ்பெக்டர் ஜமால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்தக் கடையில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் 82.85 கிலோ இருந்தது தெரியவந்தது.

அவை பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆய்வின்போது, நாகர்கோவில் நகர்மன்ற ஆணையர் ஜானகி ரவீந்திரன், சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியதாவது:

மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் பைகள், கப்புகளின் பயன்பாட்டுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளால் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத் தடை அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து வகையினராலும் பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், சில கடைகளில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகளை முழுமையாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்காமலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொடுப்பதும் தெரியவந்தது.

இவ்வாறான மீறல்கள் இறுதியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை முழுமையாக சிதைத்துவிட வாய்ப்புண்டு என மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

மேலும், தடை செய்யப்பட்ட கேரி பைகளைப் பயன்படுத்தும் விதிமீறல், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் செயலாகவும், அதனால் பொது சுகாதாரம் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகளை விற்கும் பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், விடுதிகள் இன்னும் பிறவற்றின் மீது தமிழ்நாடு குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறான

நிறுவனங்களை சீல் வைத்து, பொதுமக்களின் பொது சுகாதாரத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகளை விற்கும் நிறுவனங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

 

முறைகேடான குடிநீர் இணைப்புக்களை துண்டிக்க பெரியகுளம் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 01.06.2010

முறைகேடான குடிநீர் இணைப்புக்களை துண்டிக்க பெரியகுளம் நகராட்சி முடிவு

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக் களை துண்டிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சீத்தாலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அப்துல்சமது, கமிஷனர் (பொறுப்பு) மோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: சந்தானம்: நகர்புற வேலைவாய்ப்பு எஸ். ஜே.எஸ்.ஆர்.ஒய் திட்டத் தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை. அப்துல்ரசாக்: நகராட்சிக்கு சொந்தமான புல்பண்ணையில் மரங்கள் கடத்தப்படுகின்றன. இவற்றை பாதுகாக்கவேண்டும். முகமது சலீம்: கல்லார் ரோடு- வடக்கு பாரஸ்ட் ரோடு சந்தில் உள்ள கழிவறையில் பாதாளசாக்கடை உடைந்துள்ளது. இதனை சரிசெய்யாததால் அருகில் உள்ள வராகநதியில் கழிவுகள் கலக்கிறது. கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும். ராஜா: நகராட்சி பிரசவ ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையம் சுகாரமற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது.

முரளி: புதிதாக குடிநீர்குழாய் இணைப்பு கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகின்றனர். முகமதுசலீம்: நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில், வேறு நபர்கள் குடியிருக்கின்றனர். ஓய்வு பெற்ற பணியாளர்கள், வீடுகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும். ஜீவா: நகராட்சி எல்கை அருகேயுள்ள தென்கரை பேரூராட்சி, கீழவடகரை ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த சிலர், முறைகேடாக நகராட்சி குடிநீர் இணைப்களை அமைத்துள்ளனர். இதனால் சில வார்டுகளில் குடிநீர் கிடைக்காமல் உள்ளது.கமிஷனர்: முறைகேடான இணைப்புகள் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 


Page 416 of 506