Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுகாதாரமற்ற ஹோட்டல்களுக்கு "சீல்' ஐந்து தனிப்படை அலுவலர்கள் அதிரடி

Print PDF

தினமலர்       26.05.2010

சுகாதாரமற்ற ஹோட்டல்களுக்கு "சீல்' ஐந்து தனிப்படை அலுவலர்கள் அதிரடி

அரியலூர்: அரியலூரில் சுகாதாரமற்ற ஹோட்டல்கள் இழுத்துமூடி சீல்' வைக்கப் பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம் இல்லாத சமையல் அறைகள் மற்றும் சுகாதாரமற்ற பாத்திரங்களில் உணவு பொருட்கள் தயாரித்து வழங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில், முதல் கட்டமாக அரியலூர் நகரில் உள்ள ஹோட்டல்களின் சுகாதாரம் பற்றி ஆய்வு நடத்தும் படி அதிகாரிகளுக்கு அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அரியலூர் ஆர்.டி. ., ஜீவரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட ஐந்து பேர் தலைமையிலான ஆய்வுக்குழு, அரியலூர் நகரிலுள்ள பல்வேறுஹோட்டல்களிலும் நேற்று திடீர்ஆய்வு மேற்கொண்டது.

அரியலூர் ஆர்.டி.., ஜீவரத்தினம் தலைமையில் செயல்பட்ட தாசில்தார்கள் பாலாஜி, மகேஸ்வரன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், ரமேஷ், நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், அரியலூர் பஸ்ஸ்டேண்டிலுள்ள சந்த்ரபவன், மாலா டிபன் செண்டர், சரவணா ஜூஸ் கடை மற்றும் செந்துறை ரோடு, தேரடி உள்பட பல இடங்களில் உள்ள ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

பஸ்ஸ்டாண்டு பகுதியில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட மதியழகன் உணவகம், தேரடி அருகே சுப்ரமணியன் ஹோட்டல், செந்துறை ரோடு ஆனந்தபவன் ஹோட்டல் ஆகியவற்றை இழுத்து பூட்டி "சீல்' வைத்தனர்.செந்துறை ரோட்டில் துரு பிடித்த பாத்திரத்தில் பழச்சாறு தயாரித்து வைத்திருந்த எஸ்.எஸ்.கே. பழமுதிர்சோலை உள்ளிட்ட நான்கு கடைகளுக்கு "சீல்' வைத்தனர்.

அரியலூர் மார்க்கெட் தெருவில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட, மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி "சீல்' வைத்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு தலைமையிலான குழுவினர் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஐந்து ஹோட்டல்களுக்கு "சீல்' வைத்தனர்.

 

நகரவளர்ச்சித் துறை தகவல் குடிநீர் வாரியம் தனியார் மயம் இல்லை

Print PDF

தினகரன்     25.05.2010

நகரவளர்ச்சித் துறை தகவல் குடிநீர் வாரியம் தனியார் மயம் இல்லை

பெங்களூர், மே 25: மாநிலத்தில் இயங்கி வரும் மாநகராட்சிகளில் உள்ள குடிநீர் வாரியங்கள் தனியார் மயம் செய்யப்படாது என்று நகர வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மாநிலத்தில் இயங்கி வரும் நகர சபை மற்றும் டவுன் முனிசிபாலிட்டிகளில் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில், கன்னட கங்கா திட்டம் செயல்படுத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் 16 நகரசபைகளில் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தை மாநில நகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகல் வாரியம் செயல்படுத்துகிறது. இதற்கு தேவையான நிதி நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஹூப்ளி&தார்வார், குல்பர்கா, பெல்காம் ஆகிய மாநகரங்களில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் வழங்கபட்டுள்ளது. இதில் பலன் கிடைக்கும் பட்சத்தில், பிற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதே சமயத்தில் மாநிலத்தில் இயங்கி வரும் மாநகராட்சிகளில் செயல்படும் குடிநீர் வாரியங்கள் எந்த நிலையிலும் தனியாரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது. மாநகராட்சி கட்டுப்பாட்டில், ஒப்பந்த அடிப்படையில் சில பணி கள் மட்டுமே ஒப் படைக்கப்படும் என்றார்.

 

நவீன இறைச்சிக் கூடத்தில் மேயர், ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி         25.05.2010

நவீன இறைச்சிக் கூடத்தில் மேயர், ஆணையர் ஆய்வு

திருச்சி, மே 24: திருச்சி ஜி.கார்னர் பகுதியிலுள்ள நவீன இறைச்சிக் கூடத்தை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் ரூ. 1.6 கோடியில் நவீன இறைச்சிக் கூடம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தக் கூடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கால்நடைகள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உண்பதற்கு ஏற்றது என்பதை உறுதி செய்து, தர முத்திரை பதிக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, மாநகராட்சிப் பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 169 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேயரும், ஆணையரும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் போது, நிர்வாகப் பொறியாளர் எஸ். அருணாசலம், உதவி ஆணையர் (பொ) ஆர். மனோகரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயபாரதி, மு. வெங்கட்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 420 of 506